வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/07/2018)

கடைசி தொடர்பு:20:40 (02/07/2018)

`எங்கிருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ - மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

ஒரே இந்தியா... ஒரே பாஸ்போர்ட்என்ற திட்டத்தின் கீழ், இனி இந்தியாவில் எங்கிருந்தாலும் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் புலம் பெயர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பெரும் பயனளிக்கும்' என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கூறினார்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் கூறுகையில், "ஜூலை மாதம் 26, 27-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் `ஒரே இந்தியா... ஒரே பாஸ்போர்ட்...’ திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் புலம் பெயர்ந்து வாழும் எவரும் தங்களுக்கு பாஸ்போர்ட் கோரி அவர்கள் வாழும் பகுதிகளில் விண்ணப்பிக்கலாம். அந்தப் பகுதியிலுள்ள காவல்நிலையங்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்படும். அதேபோன்று தாங்கள் விருப்பப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மதுரை மண்டலத்தில் மட்டும் சராசரியாக நாளொன்றுக்கு 1,400 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களே இந்த மண்டலத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இனிமேல் பாஸ்போர்ட் அப்ளே செய்ய ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது. அதில் பாஸ்போர்ட் அலுவலகச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்'' என்றார் .