`நிலத்தை விட்டு வெளியேறுங்கள்; மறுத்தால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்'- போலீஸை கலங்கடித்த பெண்

`என் நிலத்தை விட்டு வெளியேறுங்கள்; இல்லையென்றால் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்' என்று  பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினார் தேவதர்சினி.

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவிடும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆங்காங்கே விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளவிடும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் மீறி போலீஸ் அடக்குமுறையோடு நிலம் அளவிடப்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு, சாலையனூர், பெலாசூர் பகுதியில் ஒரு குழுவும் அதேபோல் செய்யாறு அடுத்த எருமை வெட்டி, பெரும்பாளையம், கீழ் கொத்தூர் பகுதியில் மற்றொரு குழுவும் நிலம் அளவீடு செய்து வருகிறது. இதற்கு எதிப்பு தெரிவித்து எருமை வெட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷின் மகள் தேவதர்சினி என்பவர் தன் கழுத்தில் பிளேடை வைத்துக்கொண்டு 'என் நிலத்தை விட்டு வெளியேறுங்கள்  நிலத்தில் அளவீடு செய்தால் கழுத்தை அறுத்துக்கொள்வேன். எனக்கு என் உயிர் முக்கியம் இல்லை விவசாயம்தான் முக்கியம். இந்த நிலத்தை வைத்துதான் நாங்க உயிர் வாழுறோம். எங்களுடைய 5 ஏக்கர் நிலம். 2 கிணறு என எல்லாவற்றையும் பிடிங்கிக்கொண்டால் எங்கள் குடும்பம் எப்படி பிழைக்கும்.

பெண்

இந்த நிலத்தை வைத்துதான் எங்க அப்பா 3 பெண் பிள்ளைகளைப் படிக்க வச்சாரு. எங்கள காப்பாத்தினது இந்த நிலம்தான். அத நான் விடமாட்டேன். என் நிலத்தை அளக்காதீங்க வெளியேறுங்க' என்று கழுத்தில் பிளேடு வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தினார் தேவதர்சினி.

அவர் கழுத்தில் பிளேடு வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் போலீஸ் அவரின் கையில் இருந்த பிளேடை பிடுங்குவதற்கு அவருடைய கையைப் பிடித்து இழுத்தார். இதில் எதிர்பாராத விதமாக தேவதர்சினியின் கழுத்தில் பிளேடு கிழித்து ரத்தம் வந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அழுதுகொண்டே தேவதர்சினி, `எங்களுக்கு விவசாயம்தான் முக்கியம்' எனக் குரல் கொடுத்தார். அதன்பின் அங்கு நிலம் அளப்பது நிறுத்தப்பட்டு அதிகாரிகளும் போலீஸும் அந்த இடத்தை விட்டு வெளியேறியது. அதன் பின்பு  தேவதர்சினியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!