வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:21:20 (02/07/2018)

`தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மோதிக்கொண்ட தொண்டர்கள்!' - கலகலத்த ஆலோசனைக் கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மோதிக்கொண்டதால் கடுப்பான தங்க தமிழ்ச்செல்வன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

தங்கதமிழ்செல்வன்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் தொகுதி பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அவைத்தலைவர் ராமுத்தேவர் தலைமை வகித்தார். தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், திண்டுக்கல் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. கிழக்கு மாவட்டச் செயலாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரை பொறுப்பு வகித்து வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியவுடன் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கும் செயலாளர்களை டி.டி.வி. தினகரன் நியமித்தார். இதற்கான அறிவிப்பு நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வெளியானது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் தங்கதுரை, டி.டி.வி. தினகரன் நியமித்த ஒன்றியச் செயலாளர்களில் 10 நபர்களை விடுத்து, அதற்குப் பதிலாக புதியதாக சிலர் பெயரை அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நீக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். தங்கதுரை ஆதரவாளர்களுக்கும் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் முன்னிலையில் தொண்டர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுப்பான தங்க தமிழ்ச்செல்வன் இன்னும் ஒரு வாரத்தில் குழு அமைத்து டி.டி.வி. தினகரனுடன் இந்த விஷயத்தில் சுமுகமான முடிவெடுக்கலாம். அதுவரை யாரும் பிரச்னையில் ஈடுபடவேண்டாம் என சுருக்கமாகப் பேசிவிட்டு கோபமாக வெளியேறினார். இது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க