கோவில்பட்டியில் தறிகெட்டு ஓடிய பள்ளி வாகனம் மோதி ஒருவர் பலி! - 6 பேர் காயம்

கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயங்கி வரும் தனியார் நடுநிலைப்பள்ளியின் வாகனம் கோவில்பட்டி அருகில் உள்ள தோணுகாலில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. வாகனத்தை கோவில்பட்டியைச் சேர்ந்த மரியதாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வாகனம், எட்டயபுரம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், தலைமைத் தபால் நிலையம் முன்பு நின்றுகொண்டிருந்த 3 ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து, வாகனம் மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றது மட்டுமின்றி, அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார். 

மேலும், அங்கு நின்றுகொண்டிருந்த கோவிந்தராஜ்,  கண்ணன், மாரிமுத்து, மாரிச்சாமி மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிரிழந்த ஆட்டோ டிரைவர் தங்கராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக, பள்ளி வாகனத்தின் டிரைவர் மரியதாசை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் வேகத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் தப்பித்தனர். இந்த விபத்து கோவில்பட்டி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!