வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (02/07/2018)

கடைசி தொடர்பு:19:58 (02/07/2018)

`277 அரசு ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தினோம்' - டி.ஜி.பி நீதிமன்றத்தில் மனு

அரசு ஊழியர்களைக் காப்பாற்றவே தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என நீதிமன்றத்தில் டி.ஜி.பி ராஜேந்திரன் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டிஜிபி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் 100வது நாள் உச்சகட்டத்தை எட்டியது. 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை டி.ஜி.பி ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் `மே 22-ம் தேதி பனிமய மாதா கோவிலில் திரண்ட கிராமத்தினர் 20,000 பேர் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுப்பட்டனர். இந்தக் கூட்டத்தைக் கலைக்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனிடையே இன்னொரு பிரிவினர் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து வாகனங்களுக்குத் தீயிட்டனர்.

தூத்துக்குடி

அங்கிருந்த 150 குடும்பத்தினருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை உருவானது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்களை மீட்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட வேண்டிய நிலை உருவானது. ஏராளமான பொதுச் சொத்துகளுக்கும் தனியார் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது. தூத்துக்குடி பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளரின் மதீப்பீட்டின்படி ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் ரூ.28.12 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. மேலும், போலீஸ் வாகனம், பூத்கள், டாஸ்மாக் கடைகள் கண்காணிப்புக் கேமராக்கள் உட்பட 331 சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றின் மதிப்பு 15.67 கோடி ரூபாய். தூத்துக்குடி காவல்துறையின் முன்னாள் எஸ்.பி மகேந்திரன் இதில் தாக்கப்பட்டு காயமடைந்தார். 259 பேருக்கு எதிராக 235 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சி.பி.ஐ விசாரணை கோரி சீமான் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.