`நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ரூ.312 கோடி மானியம்!’ - மத்திய அமைச்சர் தகவல்

 நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்கள் படகு வாங்குவதற்கு ரூ.312 கோடியினை மத்திய அரசு வழங்கியுள்ளது என அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார்.

`நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்கள் படகு வாங்குவதற்கு ரூ.312 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது' என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.

நீலப்புரட்சி திட்டம் குறித்து பேசிய அமைச்சர் ராதா மோகன் சிங்

ராமேஸ்வரத்தில் `கடல் மீன்வளம் – இந்தியாவில் கடல் மீன்வளர்ப்பு' என்ற பொருளிலான மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக்கள் இடையிலான கூட்டம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள்  கஜேந்திர சிங் ஷெகாவத், கிருஷ்ணாராஜ், பர்ஷோத்தம் ருபாலா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன்லால் மேஹ்வால் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதா மோகன் சிங், ``மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை 'கடல் மீன்வளம் 2017 தேசியக் கொள்கை 'அறிவிக்கை செய்துள்ளது. இந்தக் கொள்கை அடுத்த பத்தாண்டுகளுக்கான கடல் மீன்வள மேம்பாட்டை நெறிப்படுத்தும். பாரம்பர்ய மீனவர்கள், அவர்களது சங்கங்கள், அமைப்புகள் அல்லது சுயஉதவிக் குழுக்கள், மீன்பிடிப் படகு விலையில் 50 சதவிகிதத்தை மத்திய நிதியுதவியாக பெறுவார்கள். கடற்கரையோரம் 200 மீ்ட்டர் ஆழமான மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் மீன்வளங்கள் ஓரளவு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அல்லது மிக அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த நிலைமை பாரம்பர்ய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும். நீலப் புரட்சி திட்டத்தின்கீழ், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி என்கிற புதிய துணைப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அமலாக்கத்துக்காக 2017-18 ம் ஆண்டில் மத்தியப் பங்காக ரூ.312 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பாரம்பர்ய மீனவர்கள் பயனடைவார்கள்.

இந்தியாவின் மீன் உற்பத்தி ஆண்டுக்கு 1.14 கோடி டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 68 சதவிகிதம் உள்நாட்டு மீன்வளத் துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது, எஞ்சிய 32 சதவிகிதம் கடல்பகுதிகளிலிருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் உள்நாட்டு மீன் தேவை 1.5 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மீன் உற்பத்தி 1.14 கோடி டன்னாக மட்டுமே இருக்கும். இரண்டுக்கும் இடையேயுள்ள 0.36 கோடி டன் உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் கடல் மீன்வளர்ப்பு ஆகியவற்றால் ஈடு செய்யப்படும். கூண்டுகளில் வளர்க்கப்படும் மீன்கள் விலை மதிப்புமிக்கவை ஆகும். இதனால், கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்களுக்கு அதிகமான ஏற்றுமதி தேவைகள் ஏற்பட்டுள்ளன.

ஹைதராபாத், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ.114.73 லட்சம் நிதியுதவியை 2011-ம் ஆண்டு வழங்கியது. அனைத்துக் கடலோர மாநிலங்களிலும் 14 இடங்களில் சோதனை அடிப்படையில் திறந்த கடல் கூண்டு மீன்வளர்ப்பு செயல்விளக்கத் திட்டத்தை தொழில் நுட்ப மேம்பாட்டுடன் அமல்படுத்துவதற்காக இந்த உதவி அளிக்கப்பட்டது. இந்தச் சோதனைத் திட்டங்களின் வெற்றிகரமான அமலாக்கம் மற்றும் விளைவுகள் அடிப்படையில், திறந்த கடல் கூண்டு மீன்வளர்ப்பு நடைமுறையை நாடெங்கும் கடைப்பிடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இத்தகையை திட்டங்களின் மூலம் மீனவர்கள், விவசாயிகள் வருவாயை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவது என்ற பிரதமர்  நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது'' என்றார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மாநில உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!