வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (02/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (02/07/2018)

சர்ச்சையில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டத் தி.மு.க முன்னாள் செயலாளர்!

 முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனிடம் ஆசி வாங்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை தங்கவேலனின் ஆதரவாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனிடம் ஆசி வாங்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை தங்கவேலனின் ஆதரவாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கவேலனிடம் ஆசி பெற சென்ற தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம்

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமியின் மகன் முத்துராமலிங்கம் நேற்று அறிவிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மற்றும் அவரின் மகன்கள் சம்பத், திவாகரன் ஆகியோரிடம் இருந்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தங்கவேலன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமலும் அ.தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்யாததாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க-வின் நிலை இறங்கு முகமாகவே இருந்து வருவதாக தி.மு.க தொண்டர்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வின்போது மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மாவட்ட பொறுப்பாளராக முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று ராமநாதபுரம் வந்த மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலன் மற்றும் அவரின் இளைய மகனும் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகரன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற அவரது இல்லத்துக்குச் சென்றார். அப்போது, சுப.தங்கவேலன் ஆதரவாளர்கள் வீட்டின் முன் நின்றுகொண்டு ஆசிபெறச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீண்ட நேரத்துக்குப் பிறகு, மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தை மட்டும் அனுமதித்தனர். வீட்டினுள் சென்ற முத்துராமலிங்கம் சுப.தங்கவேலனுக்கு துண்டு அணிவித்து வாழ்த்து பெற்று திரும்பினார். அதுவரை முத்துராமலிங்கத்துடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் தங்கவேலனின் வீட்டின் முன் காத்திருந்தனர்.
தலைமையால் பதவியை இழந்த ஒரே நாளில் தன் கட்சிக்காரர்கள் என்றுகூட பார்க்காமல் தி.மு.க தொண்டர்களை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்த சம்பவம் தங்கவேலன் மீதான எதிர்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.