`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!’ - கொளத்தூர் மணி வலியுறுத்தல்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்பப் பெறக் கோரி சேலம் ரயில்வே சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதி தமிழர் பேரவை, அம்பேத்கர் இந்தியக் குடியரசுக் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ``ஒரு தனி நபர் தொடுத்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அளவு கடந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி நீதிபதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறார். ஆணையம் அக்கறை இல்லாமல் வழக்கை நடத்துவதாலும், காட்சிகள் மிரட்டப்படுவதாலேயே இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்கிறார்கள்.

கொளத்தூர் மணிஆனால், இந்த வன்கொடுமை சட்டத்தைக் கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும்போது இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வி.பி.சிங் பிரதமராக இருக்கும்போது இச்சட்டம் அமலுக்கு வந்தது. வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது வகைப்படுத்தப்பட்டது. மோடி பிரதமராக இருக்கும் போது நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.
 
காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வன்கொடுமைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. வன்கொடுமை நவீன முறையில் அதிகரித்துள்ளது. படித்த இந்த சமுதாயத்தில்தான் இரட்டைக் குவளை முறைகளும், ஆணவப் படுகொலைகளும் நடைபெற்று வருகின்றன. இதை ஒழிப்பதற்கு எந்த அரசுகளும் முனைப்பு காட்டுவதில்லை. சட்டசபையில் தமிழகத்தில் ஆணவக் கொலையும், இரட்டைக் குவளை முறையும் இல்லை என்று பொய் பேசுகிறார்கள். இன்றளவும் சாதிய தீண்டாமை இருந்துகொண்டே இருக்கிறது.

அதனால் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கூடாது. இதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைந்து தண்டனை வழங்குவதோடு, மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை அரசு செய்ய வேண்டும். சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!