மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராக தூத்துக்குடி மடத்தூர் கிராம மக்கள் மனு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்குத் தூண்டியது மக்கள் அதிகாரம் அமைப்பினர் என்று குற்றம்சாட்டி மடத்துார் கிராம மக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே 22-ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதில், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த, மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதனை போலீஸார் கைது செய்தனர்.  இந்நிலையில், கடந்த ஜுன் 30-ம் தேதி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம், ``மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வாஞ்சிநாதன், அரிராகவன் என்கிற இரு வழக்கறிஞர்களும்தான் எங்களை மூளைச் சலவை செய்து,போராட்டத்தில் ஈடுபடத் துாண்டினர்” எனக் குற்றம்சாட்டி மனு கொடுத்தனர்.

இப்போராட்டத்தைக் காரணம்காட்டி போடப்பட்ட வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.   இந்நிலையில் இன்று, இரண்டாவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மடத்தூர் கிராம மக்களும் அதிகாரம் அமைப்பின் மீதே குற்றம் சாட்டியுள்ளனர். துாத்தக்குடி மடத்துார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு வந்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வாஞ்சிநாதன், அரிராகவன், நெல்லை தங்கபாண்டி என்பவர்கள், அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த எங்களிடம் வந்து, முற்றுகைப் போராட்டத்தை நடத்த தூண்டிவிட்டனர். எங்களுக்கும் அன்று நடந்த வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனு அளித்துள்ளனர்.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மார்ச் 24-ம் தேதி நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வாங்கித் தந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில்தான், வாஞ்சிநாதன், அரிராகவனை எங்களுக்குத் தெரியும். அதன் பின் எங்கள் கிராமத்துக்கு வந்த வாஞ்சிநாதன், போராட்டத்துக்கு அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிப்காட் துணை இயக்குநர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன் பின் தன்னிச்சையாக யாரிடமும் கலந்தாலோசிக்காமல், ஆட்சியர் அலுவக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். மே 20-ம் தேதி, நடந்த சமாதானக் கூட்டத்தில் எங்கள் பிரதிநிதிகள், கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடத்த சம்மதம் தெரிவித்தனர். இதை அறிந்து எங்கள் கிராமத்துக்கு வந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர்கள் 10 பேர், எங்கள் கிராம மக்களின் மனதை மாற்றி, போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். நாங்களும் அமைதியான முறையில் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டோம்.

இன்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, எங்கள் கிராம மக்கள் மீது பழிபோடும் விதமாக, ``கலவரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை” எனக் கூறி வருகின்றனர். இந்த வழக்கறிஞர்களைப் பிணையில் விடும் சூழலில், அமைதி திரும்பிக்கொண்டிருக்கும் எங்கள் கிராமப் பகுதிக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், சட்ட உதவி வேண்டி, மனு அளிக்க வந்துள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!