`இவர்களைப் பதவி நீக்கம் செய்யுங்கள்' - மத்திய அமைச்சர்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மணியரசன்!

மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா மற்றும் அனந்தகுமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனப் பிரதமருக்கு பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெ மணியரசன்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் சட்டவிரோதமானது எனவும் இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தா கவுடா ஆகியோரைப் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர் ``இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்க முடியாது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். இந்திய அரசமைப்பு சட்டத்டுக்கு உட்பட்டு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். சட்ட விரோதமாக நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடாவும், அனந்தகுமாரும் கலந்துகொண்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தரவில்லையென்றால் கர்நாடகத்தின் மீது தமிழ்நாடு அரசுப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். கர்நாடகாவில் அதிகமாக மழை பொழிந்ததால், அணைகள் உடைந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக, வெள்ளநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளார்கள். தண்ணீரைத் திறந்துவிட்ட பிறகும் கூட, காவிரி ஆணையத்தை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தண்ணீர் ஒரு பிரச்னையே அல்ல. கன்னட இனவெறியுடன் செயல்படும் அவர்கள், தமிழினத்தை விரோதியாகக் கருதுவதால்தான் காவிரி ஆணையத்தை எதிர்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!