காட்டெருமையின் உயிரைப் பறித்த மின்சாரம்...! கோவையில் நடந்த சோகம்..!

கோவை அருகே, மின்சாரம் தாக்கி, காட்டெருமை ஒன்று பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டெருமை

கோவை மாவட்டம், மாங்கரை, தடாகம்  ஆகிய பகுதிகளில் யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. மேலும், இதன் அருகிலேயே ஏராளமான பழங்குடி கிராமங்களும் இருக்கின்றன. இந்நிலையில், மாங்கரை அருகே, தூமனூர் சாலையில் தாழ்வாக இருந்த மின்கம்பி உரசி, 13 வயதே ஆன ஆண் காட்டெருமை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தூமனூர், சேம்புக்கரை போன்ற மலை கிராமங்களுக்கு சமீபத்தில்தான் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனிடையே, அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் நடமாடிய காட்டெருமை, மின் கம்பி மீது உரசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர், காட்டெருமைக்குப் பிரேதப் பரிசோதனை செய்து, அதை அடக்கம் செய்தனர். ``பழங்குடி மக்களின் அடிப்படை வசதிகள் முக்கியம்தான். அதே நேரத்தில் வனவிலங்குகளைக் காக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது” என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ``அந்தப் பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்துள்ளோம். வன விலங்குகளுக்கு பாதிப்பில்லாமல், மாற்றுப் பாதையில் மின்சாரம் கொண்டு செல்லும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!