வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:08:31 (03/07/2018)

‘வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று' - அசத்திய ஸ்டேட் பேங்க் அதிகாரிகள்...!

மரக்கன்று

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் அமைந்திருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஈரோடு டவுன் கிளை. எப்போதுமே கூட்டமாகவும், பரபரப்பாகவும் இயங்கும் இந்த வங்கியில் இருந்து நேற்று (ஜூன் 2) வெளியேறிய வாடிக்கையாளர்கள் கையில் வெள்ளை நிறத் துணிப் பையில், மரக்கன்றுகளை ஏந்தியபடி வந்தனர். இதையறிந்த நாம் வங்கிக்குள் சென்று பார்த்தோம்.

வங்கியின் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க, இளைஞர் ஒருவர் அவர்களுக்கு சீத்தா, தேக்கு, பலா, கொய்யா, மாதுளை, மகாக்கனி (நிழலுக்காக வளர்க்கப்படும் மரம்) என விதவிதமான மரக்கன்றுகளை கேட்டு வழங்கிக்கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குவதற்காக காரணம் என்ன?... என வங்கியின் மேலாளர் சங்கர் அருணாச்சலம் அவர்களிடம் பேசினோம்.

மரக்கன்று

``இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்று இயங்கி வந்த வங்கியானது, ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ ஆக 1955-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி உருவானது. அதையொட்டி ஒவ்வொரு வருடமும் ஜூலை 1-ம் தேதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உருவான நாளை நாங்கள் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உருவான நாளை ஒரு சமூக அக்கறையோடு கொண்டாட வேண்டும் என எங்களுடைய ஈரோடு மண்டல மேலாளர் கூறினார். அதனையடுத்து எங்கள் கிளையில் உள்ள பணியாளர்கள் கூடி முடிவெடுத்து, வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குவது என முடிவெடுத்தோம். ஏனென்றால், மனிதாகிய நாம் 100 சதவிகிதம் இயற்கையைச் சார்ந்துதான் இயங்கி வருகிறோம். இயற்கை இல்லையென்றால் மனித இனம் உயிர்வாழவே முடியாது. ஆனால், இன்றைக்கு இயற்கை வளங்கள் நம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதைப் பார்க்கையில் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. புவி வெப்பமடைவதில் தொடங்கி, பருவநிலை மாற்றங்கள் என இயற்கையின் வடிவமே மாறிவருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான முன் முயற்சியை இனியாவது எடுக்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, இயற்கையின் அவசியத்தை எடுத்துரைத்திருக்கிறோம்” என்றார்.

இதுபோன்று அனைவரும் இயற்கையின் அவசியத்தை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும்.