`தமிழகத்தில் நடப்பது பி.ஜே.பி-யின் பினாமி ஆட்சி' - திருநாவுக்கரசர் சாடல்!

நெய்வேலியில் கடலூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். 

திருநாவுக்கரசர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,   ``தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது.  ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் கிராமங்களில் எந்தப்பணிகளும் நடக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலை 6 மாதம் தள்ளிவைத்தது தவறு. 6 மாதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாது. எனவே, உடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகள் கூறியதால் மூன்றாவது நீதிபதிக்கு அந்த வழக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பு சீக்கிரம் சொல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஏற்கெனவே காலதாமதமாகதான் தீர்ப்பு வந்தது. 

18 தொகுதி மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. பதவி இருக்கு இல்லை என்று ஒரு முடிவு சீக்கிரம் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை சபாநாயகர் சொன்னது தவறு என்று வருமானால் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளது. இப்ப இருக்கும் ஆட்சி முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் ஆட்சியாகவே உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு பி.ஜே.பி ஆட்சி செய்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் பி.ஜே.பி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நடக்கும் ஆட்சி பி.ஜே.பி-யின் பினாமி ஆட்சியாக இருக்கிறது. பி.ஜே.பி-க்குப் பயந்து, பணிந்து நடக்கும் ஓர் ஆட்சியாகவே உள்ளது. போலி வாக்குறுதிகளால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் 4 ஆண்டுகள் மோடி அரசாங்கம் மக்களை ஏமாற்றி இருக்கிறது. எனவே மத்திய அரசும், மாநில அரசும் மாற்றப்பட வேண்டும். விரைவில் தேர்தல் வரும்போது மாற்றம் நடந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராவார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்க வேண்டும், ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது, பேசுவது பாவம் அல்ல. அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். நாங்கள் தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!