வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (03/07/2018)

கடைசி தொடர்பு:08:20 (03/07/2018)

`தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்' - எம்.எல்.ஏ-க்கள் சார்பில் மனு!

தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

18 எம்எல்ஏக்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்பு அளித்தனர். அதனையடுத்து, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டதுடன் நீதிபதி விமலா மூன்றாவது நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், நீதிபதி விமலா மீது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சுமத்தினர். பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் தங்க தமிழ்ச்செல்வனைத் தவிர்த்த மற்ற 17 எம்.எல்.ஏ-க்களும், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்றாவது நீதிபதியாக விமலாவுக்குப் பதிலாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்ததுடன் வழக்கை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியது. ஆனால், வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் மீண்டும் காலதாமதம் ஆகும் என டி.டி.வி. தினகரன் தரப்பு கருதுகிறது. இதையடுத்து, நேற்று டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து இன்று பரிசீலிக்கப்பட்டு விரைவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க