நேபாளத்தில் தொடரும் கனமழை - தமிழக பக்தர்கள் உள்பட 1,200 பேர் சிக்கித் தவிப்பு | 1200 Kailash Manasarovar pilgrims stranded in Nepal

வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (03/07/2018)

கடைசி தொடர்பு:08:44 (03/07/2018)

நேபாளத்தில் தொடரும் கனமழை - தமிழக பக்தர்கள் உள்பட 1,200 பேர் சிக்கித் தவிப்பு

நேபாளத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால் கைலாஷ் யாத்திரை சென்ற 1200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கைலாஷ்

கைலாய யாத்திரைக்காக பல நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேபாளம் செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேபாளம் சென்றுள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக அங்கு கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. தவாங் உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும் பர்சா, சிந்துலி, கைல்கலி, நவல்பரசி போன்ற இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து நேபாள் சென்ற பக்தர்கள் மழையில் சிக்கித் தவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து சென்ற 19 பேர் சிமிகோட் என்ற இடத்திலும் கர்நாடகாவைச் சேர்ந்த 290 பேர் கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிமிகோட் பகுதியில் சிக்கியிருப்பவர்களுக்குப் போதுமான உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் அவதிப் பட்டு வருவதாகவும், அவர்களில் பலர் 60 வயதைத் தாண்டிய பெண்கள் என்பதாலும் தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேபாளத்தில் சிக்கியிருப்பவர்களின் நிலை பற்றி தெரிந்துகொள்ள கர்நாடக அரசு உதவி எண் அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.