‘முதல்வரே கலவரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்’ - எம்.பி கனிமொழி தாக்கு

``எட்டு வழிச்சாலை திட்டத்தின் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலவரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்” என தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.


கனிமொழி

தி.மு.க. மகளிரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கருணாநிதி 95

கருத்தரங்குக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ``காவிரி நீர் விவகாரத்தில் மேலாண்மை ஆணையம் 30 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டுமென  உத்தரவிட்டிருக்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நம்முடைய உரிமைகளை பெற்றிருக்கிறோம். உரிய முறையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆணையம் உத்தரவிட்டபடி அதை செயல்பாட்டில் கொண்டுவந்தால் மட்டுமே விவசாயிகள் பயனடைய முடியும். சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்காமல் காடு, விவசாய நிலங்கள், மலைகளை அழித்து மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த முனைப்புடன் இருக்கிறார். மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலவரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!