தீவிர தேடுதலுக்குப் பிறகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பிணமாக மீட்பு!

சிறுவன் முகமது ஆசாத் -ஐ மீட்கும் பணி

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாராயணநகர், பச்சப்பட்டி, கிச்சிபாளையம் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதியைச் சேர்ந்த முகமது ஆசாத் என்ற 16 வயது சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். அதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத் துறை, காவல்துறையினர் அனைவரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். இன்று காலை 8:00 மணிக்கு கிச்சிப்பாளையம் அஜ்மீர் ஹோட்டல் அருகே இறந்த நிலையில் அந்தச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

சேலம் நாராயணநகர் ஹவுசிங் யூனிட் ஏ பிளாக்கில் குடியிருப்பவர் முகமது ஈஷாக். அவரின் மனைவி முராக் உன்னிஷா. இவர்களுக்கு முகமது ஆசிப், முகமது ஆசாத் என இரண்டு மகன்கள். இளைய மகன் முகமது ஆசாத் வயது 16. நேற்று முன்தினம் மாலை சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, கனமழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளக் காடாக இருந்துள்ளது. அப்போது மாநகராட்சிக் கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்ததில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.

இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்தினம் இரவு முதலே ஊர் பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் என அனைவரும் தீவிரமாக தேடி வந்தார்கள். இதற்கிடையே நேற்று காலை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, முகமது ஈசாக் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று பகல் முழுவதும் கிடைக்கவில்லை. நேற்றிரவு மீண்டும் மழை வந்ததால் தேடுதலில் சுணக்கம் ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு  கிச்சிபாளையம் அஜ்மீர் ஹோட்டல் அருகே சிறுவனின் உடல் மிதந்திருப்பதைப் பார்த்து பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து முகமது ஆசாத்தின் உடல் மீட்கப்பட்டு பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது. சிறுவனின் உடலைப் பார்த்த பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!