புதிய வண்ணங்களில் தமிழக அரசுப் பேருந்துகள் - முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்துக்கு ரூ.134 கோடி செலவில் 515 புதிய பேருந்துகளை இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

முதல்வர்

300 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் பல புதிய பேருந்துகள் இயக்கப்படும் என முன்னதாக தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன் முதல்கட்டமாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ரூ.134 கோடி செலவில் 515 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், திண்டுகல் சீனிவாசன், செல்லூர் ராஜு, செங்கோட்டையன் என பல அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், இன்று போக்குவரத்துத் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில், இந்தப் புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய நிறங்களில் தனியார் பேருந்துடன் போட்டிப்போடும் வகையில் இந்தப் புதிய பேருந்துகள் இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் படுக்கைகள் கொண்ட 14 அரசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் சென்னையிலிருந்து  விழுப்புரம், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், ஈரோடு மண்டலங்களுக்கு மட்டுமே  இந்தப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!