'கூட்டணி வேண்டும்!' - காங்கிரஸ்; 'திருநாவுக்கரசர் வேண்டாம்!’ - தி.மு.க.

' காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் விரும்பாவிட்டால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே தோல்விதான் வந்துசேரும்' என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்

'கூட்டணி வேண்டும்!' - காங்கிரஸ்; 'திருநாவுக்கரசர் வேண்டாம்!’ - தி.மு.க.

மிழக அரசியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை மையமிட்டிருக்கிறது. 'காங்கிரஸ் கூட்டணிக்குள் தி.மு.க வர வேண்டும் என்பதில் சோனியா காந்தி உறுதியாக இருக்கிறார். அதேநேரம், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வராத வரையில் தி.மு.கவுடன் கூட்டணி அமையப் போவதில்லை' என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். 
    
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து, அறிவாலயத் தரப்பில் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. மூன்றாவது அணிக்கான முயற்சிகளைத் தொடங்கிய மம்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் அதன் தொடர்ச்சியாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோபாலபுரம் வந்ததும் ராகுல் கண்களை உறுத்தத் தொடங்கியது. இதன் அடுத்தகட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்துப் பேசினார் ராகுல்காந்தி. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகளும், 'தி.மு.க அணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். வி.சி.க நடத்தும் மாநாட்டில் ராகுல் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாடு தொடர்பாக தி.மு.கவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது' என விளக்கம் அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் இப்படிப் பேசினாலும், அறிவாலயத்தின் மௌனம் காங்கிரஸ் நிர்வாகிகளை கதிகலக்கி வருகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசினார் ராகுல். இந்தச் சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்குள் தி.மு.கவைக் கொண்டு வருவதற்கான பணிகளில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ``காங்கிரஸ் பக்கம் தி.மு.க வந்துசேர வேண்டும். அப்படி வந்தால்தான் மோடிக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க முடியும். காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் விரும்பாவிட்டால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே தோல்விதான் வந்துசேரும். அந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மூன்றாவது இடமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காவது இடமும் தி.மு.கவுக்குக் கிடைத்தது. அதுவே, தி.மு.கவோடு காங்கிரஸ் அணி சேர்ந்த தேர்தல்களில் எல்லாம் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். எங்கள் பக்கம் தி.மு.க வந்தால், 2009-ம் ஆண்டு கொடுத்ததைப்போல 16 இடங்களை எங்களுக்குத் தர வேண்டும்.

அந்த இடங்களில் சில தொகுதிகளை எங்களை நம்பி வரும் மற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுப்போம். காங்கிரஸ் இருக்கும் இடத்தில்தான் மோடி எதிர்ப்பு என்பது பயன் தரும். நாங்கள் இல்லாமல் மோடி எதிர்ப்பைப் பேசுவதால் மாநிலக் கட்சிகளுக்கு எந்தப் பயனும் வந்து சேரப் போவதில்லை. தேசியக் கட்சியின் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால், தி.மு.கவின் செல்வாக்கு 20 சதவிகிதத்துக்குகீழ் சரியும். எங்கள் பக்கம் வருவதை தி.மு.க விரும்பாவிட்டால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் ராகுல். அப்படியொரு புதிய அணி உருவானால் அதில், அன்புமணி, தினகரன், கமல் ஆகியோர் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். தி.மு.கவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார் விரிவாக. 

`` தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் மாற்றம் வராத வரையில், கூட்டணி குறித்து தி.மு.க  எதுவும் பேசப் போவதில்லை. ' திருநாவுக்கரசரை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது' என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் 39 எம்.பி சீட்டுகளை ஜெயிக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கவைவிட்டால் வேறுவழியில்லை. தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறுவதற்கெல்லாம் கமல் பயன்பட மாட்டார். அவரைக் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான். அவரை மட்டும் நம்பி காங்கிரஸ் கட்சித் தலைமை எந்த முடிவையும் எடுக்காது. கமலைப் பார்ப்பது, பேசுவது என்பது வேறு. அரசியல்களத்தில் நிரூபிக்கப்படாத கட்சி அது. தேர்தல் களத்தில் தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ., சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்த பிரமாண்ட கூட்டணி அமைய வேண்டும் என விரும்புகிறோம். அதற்குத் தி.மு.கவுடன் இணைந்து செயலாற்றுமளவுக்கு இதயபூர்வமான உறவை அணுகக் கூடிய தலைவர் இங்கு இருக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் மாற்றம் வரும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியும் இறுதி செய்யப்பட்டுவிடும்" என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!