வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (03/07/2018)

கடைசி தொடர்பு:12:40 (03/07/2018)

``ரூ.50 கோடி வரி வசூல் ஏமாற்று நாடகம்”- கிரண்பேடியைச் சாடிய அமைச்சர்

``மின் துறையில் ரூ.50 கோடி வரி வசூல் என்பது ஏமாற்று நாடகம்” என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக சாடியிருக்கிறார் மின்துறை அமைச்சர் அமைச்சர் கமலக்கண்ணன்.

கிரண்பேடி

புதுச்சேரி மின் துறைக்கு வர வேண்டிய பாக்கிக் கட்டணம் 120 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக நிலுவையிலேயே இருந்தது. இந்த நிலையில், அவர்களின் பெயர்ப் பட்டியலை நாளிதழ்களில் வெளியிடுமாறு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. இதையடுத்து நான்கே நாள்களில் 50 கோடி ரூபாய் மின் கட்டணப் பாக்கித் தொகை வசூலாகியிருக்கிறது என சமூக வலைதளங்களில் தெரிவித்தார் ஆளுநர் கிரண்பேடி.

அமைச்சர் கமலக்கண்ணன்

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த், ``ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் மின் கட்டணப் பாக்கித் தொகை வசூலாகியிருக்கிறது” என்று பாராட்டிப் பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், ``துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் நாடகமாடி விளம்பரம் தேடுகிறார். 50 கோடி ரூபாய் வரிவசூல் என்பது ஏமாற்று வேலை. ஆளுநரின் ஆய்வுக்குப் பிறகு மின்துறையின் வரி வசூல் குறைவு” என்று கூறிய அமைச்சரிடம் ``மின்சார வரி வசூல் எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பிய சபாநாயகர் வைத்திலிங்கம் அதற்குப் பதில் கூறுமாறு வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் கமலக்கண்ணன், ``துணைநிலை ஆளுநர் கூறுவதுபோல் 50 கோடி ரூபாய் வசூல் ஆகவில்லை. அதேபோல கடந்த மாதத்தைவிட கூடுதலாகவும் வசூலாகவில்லை. கடந்த மாதம் வசூலான மின் கட்டணத் தொகை 109 கோடி ரூபாய். இந்த மாதம் வசூலாகியிருக்கும் தொகை 112 கோடி ரூபாய். அதுவும் ஆளுநர் சென்ற 3 நாள்களில் வசூலான தொகை வெறும் 39 லட்சம் மட்டுமே. ஆனால், அதற்காக நாள் ஒன்றுக்கு 4 லட்சம் ரூபாய் விளம்பரத்துக்காக செலவிடப்படுகிறது” என விளக்கம் அளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க