`குறைந்த அவகாசமே உள்ளது'- அனுமதியற்ற மனைகளை வரைமுறைப்படுத்த கலெக்டர் வேண்டுகோள் | Camp to limit unauthorized lands, suggests collector

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (03/07/2018)

கடைசி தொடர்பு:13:20 (03/07/2018)

`குறைந்த அவகாசமே உள்ளது'- அனுமதியற்ற மனைகளை வரைமுறைப்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

கரூரில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரைமுறைப்படுத்த நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கிவைத்து பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுத்தார்.

 முகாம்

கரூர் நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரைமுறைப்படுத்துதல் தொடர்பான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு வரைமுறைப்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், ``கரூர் நகராட்சிக்குட்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்த கரூர் நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20.10.2016-க்கு முன் ஏற்படுத்தப்பட்ட மனைகள் அல்லது அனுமதியற்ற மனைகள் வரைமுறைப்படுத்திக்கொள்ள குறைந்த அவகாசமே உள்ளதால் இன்றே விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மனையின் கிரைய பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்றிதழ், புலப்பட நகல் மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றின் நகல்களும் கரூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

வரைமுறைப்படுத்த தவறும் மனைப்பிரிவுகளில் அனுமதியற்ற மனைகளாக அமைவதுடன் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, குடிநீர் வசதி, மின்வசதி போன்ற வசதிகள் இந்நிர்வாகத்தால் வழங்க இயலாது. மேலும் கட்டட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் மனை உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற இயலாது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனையின் கிரையப்பதிவு மேற்கொள்ள இயலாது. எனவே, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் மனைகளை வரைமுறைப்படுத்திக்கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு கரூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்புப் பகுதியைத் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.