`130 படகுகளில் 28 மட்டுமே மிஞ்சும்'- இலங்கைக்குச் சென்ற தமிழக மீனவர்கள் வேதனை

``இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 130 விசைப்படகுகளில் 28 படகுகள் மட்டுமே மீட்கும் நிலையில் உள்ளன'' எனப் படகுகளை ஆய்வு செய்ய இலங்கைக்குச் சென்ற இந்தியக் குழு வேதனை தெரிவித்தனர்.

இலங்கை கடற்கரை பகுதியில் பழுதடைந்து மூழ்கி கிடக்கும் தமிழக படகுகள்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கடந்த 30 வருடங்களாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர்களையும், படகுகளையும் சிறைப்பிடிக்கும் இலங்கை அரசு மீனவர்களை மட்டுமே நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்கின்றனர். எல்லை தாண்டிவந்ததாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 184 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அந்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளது இலங்கை கடற்படை. இவற்றில் 42 விசைப்படகுகளை விடுதலை செய்தது இலங்கை அரசு. இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு 32 படகுகள்  மட்டுமே மீட்ட நிலையில், எஞ்சிய 10 படகுகள் சேதமானதால் மீட்க முடியாமல் போனது. இவற்றுக்கு மாற்றாக 10 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு சம்மதித்தது. இந்தப் படகுகளை மீட்டு வருவது குறித்து ஆய்வுசெய்ய 4 பேர் கொண்ட குழு கடந்த 27-ம் தேதி இலங்கை சென்றது. படகுகளைப் பார்க்கச் சென்ற அந்தக்குழு 130 விசைப்படகுகளில் வெறும் 28 படகுகள் மட்டுமே மீட்டு வரும் நிலையில் உள்ளதாகவும் எஞ்சிய படகுகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் சேதமடைந்திருப்பதாகவும், எனவே மீட்கும் நிலையில் உள்ள படகுகளையாவது இலங்கையிலிருந்து எடுத்து வர இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என மீனவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங்கிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ``இந்திய- இலங்கை கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்துப் பேசி படகுகள் விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே நடக்க வேண்டிய இந்தக் கூட்டம் இலங்கையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!