மாடு, உரிமையாளர், நாய் மின்சாரம் தாக்கி பலி! ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது நடந்த சோகம்

 

மின்சாரம் தாக்கி பலியான மாடு, நாய், முதியவர்

உசிலம்பட்டி பகுதியில், நேற்று பெய்த கன மழையால் மின்வயர் அறுந்ததில் மின்சாரம் தாக்கி முதியவர், மாடு, நாய் என மூன்று உயிர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கல்கொண்டான்பட்டியில், நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக மின்வயர் அறுந்தது. அதை அறியாமல், இன்று காலை கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவர் தனது தோட்டத்தில் மாடு மேய்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அறுந்துகிடந்த மின்வயரை மிதித்துத் துடித்த மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அதேநேரம், முதியவரின் வளர்ப்பு நாய் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயல்வதாக மின்வயரைக் கடித்து இழுத்ததால், நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர். இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த உத்தப்பநாயக்கனூர் போலீஸார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார்.

மின் கம்பியை கடித்து பலியான நாய்

 

மேலும், தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்குப் போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த சம்பவம், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!