வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (03/07/2018)

கடைசி தொடர்பு:16:16 (03/07/2018)

"ஜோதிமணிதான் பார்ட் டைம் கட்சிக்காரர்!" - கரூர் காங்கிரஸ் கலாட்டா

காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் தொடர்கதையாகிவிட்டது.

``பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு பலரும் கண்ணை மூடிக்கொண்டு, `காங்கிரஸும்,கோஷ்டிப் பூசலும்'' என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது என்கின்றனர் அதன் நிர்வாகிகள். ``தமிழக காங்கிரஸ் கமிட்டியில் களைகட்டும் கோஷ்டிப் பூசல், இப்போது மாவட்ட அளவிலும் வளர்ந்திருக்கிறது'' என்கின்றனர் அவர்கள். குறிப்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டிக் கானம் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. கரூர் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியன் தரப்புக்கும், இப்போதைய மாவட்டத் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியின் ஆதரவாளருமான சின்னச்சாமி தரப்புக்கும் கோஷ்டிச் சண்டை உச்சத்தை எட்டியிருக்கிறது. 

இதுகுறித்து அங்குள்ள காங்கிரஸ் தரப்பினரிடம் பேசினோம். ``கரூர் மாவட்ட காங்கிரஸைப் பொறுத்தவரை கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பேங்க் சுப்ரமணியனுக்கும், ஜோதிமணிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகக் கட்சி, பேங்க் சுப்ரமணியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளரான அவர், கடந்த பதினைந்து வருடங்களாக மாவட்டத் தலைவராக இருந்தார். மாநில,தேசிய அரசியலில் அதிரிபுதிரி காட்டிய ஜோதிமணியால், எவ்வளவோ முயன்றும் சொந்த மாவட்டத்தில் ஆதிக்கம் காட்ட முடியாமல் இருந்தது. கட்சித் தலைமையிடம் ஜோதிமணிமீது கூட்டிக் குறைத்துச் சொல்லி, பேங்க் சுப்ரமணியன் ஜோதிமணியைக் கட்சியைவிட்டே ஓரங்கட்ட வைத்த நிகழ்வும் நடந்தது. 

 காங்கிரஸ்

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டபிறகு நிலைமை தலைகீழ். மளமளவென அரசியல் சதுரங்க விளையாட்டில் முன்னேறிய ஜோதிமணி, `பேங்க் சுப்ரமணியன், ஈ.வி.கே..எஸ்.இளங்கோவன் ஆள்' என்று திருநாவுக்கரசரிடம் சொல்லி, அவரை அந்தப் பதவியிலிருந்து தள்ளிவிட்டு, தனது ஆதரவாளரான சின்னச்சாமி என்பவருக்கு மாவட்டத் தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்தார். ஆனால், பேங்க் சுப்ரமணியன் மாவட்டத் தலைவர் போலவே கூட்டங்களை நடத்த, ஜோதிமணி தரப்பு வெடித்தது. ஒரு கட்டத்தில் பேங்க் சுப்ரமணியன், `தனக்கே மாவட்டத் தலைவர் பதவியை தர வேண்டும்' என்ற கோரிக்கையோடு டெல்லிக்கும் படையெடுத்தார். இந்த நிலையில், வேறு வழியில்லாமல் ஜோதிமணி தரப்போடு அனுசரித்துச்  சென்றார், பேங்க் சுப்ரமணியன். ஆனால், அவ்வப்போதும் கோஸ்டிப் பூசல் வெடிக்கவே செய்தது'' என்றனர் மிகத் தெளிவாக.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாவட்டத் தலைவர் சின்னச்சாமி தரப்பு, ``கட்சியின் கரூர் நகரத் தலைவராகச் சௌந்தரராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ஸ்டீபன்பாபு என்பவர் யாரும் அறிவிக்காமலேயே தன்னை நகரத் தலைவர் என்று சொல்லி, தவறாகச் செய்தி பரப்புகிறார். அவரை, கட்சியினர் யாரும் நகரத் தலைவராக அங்கீகரிக்கத் தேவையில்லை'' என்கிற ரீதியில் ஒரு கடிதத்தைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. ஸ்டீபன்பாபு, பேங்க் சுப்ரமணியன் ஆதரவாளர். இதனால், கொதித்தெழுந்த பேங்க் சுப்ரமணியன் ஆதரவாளரும், கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளருமான சுரேகா பாலச்சந்தர், தனது ஆதரவாளர்களோடு வீட்டு உபயோகப் பொருள்கள் சகிதம்போய், காங்கிரஸ் அலுவலகத்தில் குடிபுகுந்து ஜோதிமணி தரப்பை ஆடிப்போக வைத்திருக்கிறார்.

 மாவட்டத் தலைவர் சின்னசாமிகரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி

சுரேகா பாலச்சந்தரிடம் பேசினோம், ``கரூரை இரண்டு நகரமாகப் பிரித்து, அவங்க தரப்பில் சௌந்தரராஜனையும்,ஸ்டீபன் பாபுவையும் நகரச் செயலாளர்களாக அறிவித்தார் மாநில தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத். ஆனால், ஜோதிமணி தரப்பு ஸ்டீபன்பாபுவை நகரச் செயலாளராக எந்த இடத்திலும் அங்கீகரிப்பதில்லை. அதோடு, மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, `சௌந்தரராஜன் மட்டுமே நகரத் தலைவர். வேறு யாரையும் நகரத் தலைவராக நாங்கள் நியமிக்கவில்லை' என்று சமூக வலைதளங்களில் ஒரு லெட்டரை வெளியிட்டார். மேலும் வருகிற 8- ம் தேதி கரூருக்கு காங்கிரஸ் தலைவர் வர இருக்கிறார். அதற்காக கரூர் நகர ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் மாவட்டத் தலைவர் கூட்டினார். அன்றுதான் ஸ்டீபன்பாபுவின் அம்மா இறந்துபோனார். அது தெரிந்ததும், அவர் இல்லாமல் நகர ஆலோசனைக் கூட்டத்தை அவசரம் அவசரமாகக் கூட்டினார்கள். அதில் பேசிய ஜோதிமணி, `கட்சிக்கு முழுநேரம்  வேலை பார்க்கும் ஆள்கள்தாம் தேவை. ஸ்டீபன்பாபு, பேங்க் சுப்ரமணியன் மாதிரியான பார்ட் டைம் வேலை பார்க்கும் உறுப்பினர்கள் தேவையில்லை' என்று சொல்லியிருக்கிறார். அதனால் கோபமான நான், என் ஆதரவாளர்களுடன் மாவட்ட அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கிருந்த மாவட்டத் தலைவர் சின்னச்சாமியிடம், `முழுநேரமாகக் கட்சிக்காக உழைக்கும் எங்களை ஜோதிமணி, பார்ட் டைம் ஆள்கள் என்று சொல்லி இருக்காங்க. நீங்களும் அதைத் தட்டிக் கேட்கலை. அதான், முழுநேரமா இங்கேயே தங்கி கட்சிப் பணியாற்ற வந்திருக்கிறோம். கட்சி வேலைகளைக் கொடுங்க. 24 மணி நேரமும் இருந்து பணியாற்றுகிறோம்' என்று சொன்னோம். `அவங்க பேசுனதை நான் கேட்கலை' என்று  சுரேகா பாலச்சந்தர்சின்னச்சாமி மழுப்பினார். அப்புறம், `அவங்க அப்படிப் பேசியிருந்தா, அவங்க சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்' என்றார்.

பின்பு, மதியம்வரை அங்கிருந்த நாங்கள், சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் மாவட்ட அலுவலகத்தைப் பூட்டிட்டு எஸ்கேப்பாகி விட்டார் சின்னச்சாமி. உண்மையில், நாங்கள்தான் கட்சிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறோம். லட்சம் லட்சமா செலவு பண்றோம். சமீபத்தில் நடந்த ராகுல் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்காக 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம். ஆனால், ஜோதிமணி தரப்பு பத்துப் பைசாகூடச் செலவு பண்ணவில்லை. அதேபோல், கரூருக்கு ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை வரும் ஜோதிமணிதான் கட்சிக்காகப் பார்ட் டைமா வேலை பார்ப்பதோடு, கட்சியின் அழிவுக்கு டைம் பாமும் வைக்கிறார்" என்றார் அதிரடியாக.

கரூர் மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, ``பேங்க் சுப்ரமணியன் தரப்பு கரூர் மாவட்டத்தில் கட்சியைச் சுண்டைக்காய் சைஸுக்கு வைத்திருந்தது. சொந்த வேலைகள் பார்த்த நேரம்போக, மீதி நேரத்தில் கட்சிக்காகச் செயல்பட்டது அவர்கள்தாம். மாவட்ட அலுவலகத்தைக்கூடத் தனது தொழில்கூடத்தில் வைத்திருந்தார். ஆனால், நான் பொறுப்புக்கு வந்தபிறகு 24 மணி நேரமும் கட்சிக்காக உழைக்கிறேன். உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியதோடு, அடுத்தகட்டமாக, பூத் கமிட்டிகளைத் தொகுதிவாரியாக அமைத்து வருகிறோம். ஜோதிமணி மேடம், மிகச் சிறப்பாகக் கரூர் மாவட்டத்தில் இழந்த காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கப் பாடுபடுகிறார். எப்படியாவது இழந்த மாவட்டத் தலைவர் பதவியைப் பெற்றுவிட துடிக்கும் பேங்க் சுப்ரமணியன், எங்க வேகத்தைப் பார்த்து பயந்துபோய்விட்டார். அதனால்தான், `ஸ்டீபன்பாபுதான் நகரத் தலைவர்' என்கிற பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார்கள். அது புஸ்வானம் ஆனதும், சுரேகா பாலச்சந்தர் இப்படி அலுவலகத்தில் புகுந்து ரகளை பண்ணினார். எதையாவது செய்தாவது என்னை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். நான் அடிமட்டத்திலிருந்து கட்சிக்காக உழைத்து இந்த இடத்துக்கு வந்தவன். ஆக, அவர்கள் எது நினைத்தாலும் அது நடக்கவே நடக்காது. பகல் கனவாவே போகும்" என்றார் மிகவும் ஆக்ரோஷமாக!

இதுகுறித்து ஜோதிமணியிடமும், பேங்க் சுப்ரமணியனிடமும் பேச முயன்றோம். முடியவில்லை. 

காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் தொடர்கதையாகிவிட்டது.