சரணாலயத்தில் வனவிலங்குகள் குடிநீருக்காக அலையும் பரிதாபம்!

நாகை மாவட்டம் கோடியக்கரையில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில், இயற்கையான குளங்களும், செயற்கைக் குளங்களும் வறண்டுகிடப்பதால், குடிநீருக்காக விலங்குகள் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

Kodiyakarai

பசுமை மாறாக்காடாக உள்ள கோடியக்கரை சரணாலயம், 17.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.  இங்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான்களும் புள்ளி மான்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள், பன்றிகள், நரிகள் மற்றும் முயல்கள் உள்ளன.  இந்த வனப்பகுதியில், தற்போது கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. இதனால், பச்சைப் பசேலென காட்சியளித்த மரங்களெல்லாம் காய்ந்து கருகத் தொடங்கிவிட்டன.  சரணாலயத்தில், 52 இயற்கையான குளங்களும் முற்றிலும் வறண்டுபோய்க் கிடக்கின்றன. 17 செயற்கையாக அமைக்கப்பட்ட நீர்த் தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை.  

இதுபற்றி இயற்கை ஆர்வலர்களிடம் பேசியபோது, “செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வனத்துறையினர் டேங்கர் லாரி மூலம் தண்ணீர்  கொண்டுவந்து ஊற்றுகிறார்கள்.  இந்தத் தண்ணீர், ஆயிரக்கணக்கான விலங்குகளுக்குப் போதுமானதாக இல்லை.  மான்களும் குரங்குகளும்  குடிநீருக்காக சரணாலயத்தை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டன. குடிநீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு, விலையாக்கப்படுகின்றன.  சில சமயங்களில் நாய்கள், மான்களைக் கடித்துக் குதறிக் கொன்றுவிடுவதும் உண்டு.  தற்போதுகூட, குடிநீர் இல்லாமல் நோய்வாய்ப்பட்ட குதிரை ஒன்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது. எனவே, வனத்துறையினர் வனவிலங்குகளைப் பாதுகாக்க தினந்தோறும் செயற்கைத் தொட்டிகளில் நீர் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!