`இந்த இரண்டு அமைச்சர்கள்போல் இருந்தால் நல்லது’ - அன்பில் மகேஷ் பேச்சால் பேரவையில் சிரிப்பலை

சட்டப்பேரவையில், அ.தி.மு.க - தி.மு.க-வினர் மாறி மாறிப் புகழ்ந்துகொண்டனர்.

திமுக

 கடந்த மாதம் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் , வரும் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், இன்று போக்குவரத்துத் துறைக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி, `விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் காதி மற்றும் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகிய இரண்டு அமைச்சர்களை எனக்குப் பிடிக்கும். காரணம், அதில் ஒருவர் எப்போதும் அமைதியாகவே இருப்பார், மற்றொருவர் சிரித்த முகத்துடனே இருப்பார். அமைச்சர்கள் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் பாஸ்கரன் போல அனைத்து அமைச்சர்களும் இருந்தால், என் உரையை முடிக்க வசதியாக இருக்கும்' என அவர் கூறியவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.

ஓபிஎஸ்

அவரைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், `தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாரம்பர்யமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அவைக்கு வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. அவ்வளவு அமைதியானவர். அவரைப்போல மற்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்க வேண்டும்' என்று பதிலுக்குப் பேச, சட்டப்பேரவைக்  கலகலத்தது. தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் உரையைக் காண, உதயநிதி ஸ்டாலின்  சட்டப்பேரவைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!