‛எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறது’- போலீஸ்மீது பழங்குடியின கூட்டமைப்பு குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் மற்றும் அவர்களது பிரச்னைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் சோபா ஈடுபட்டுவருகிறார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், தற்பாேது கூடலுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் கணக்கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-07-2018) மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் சோபா ஆகிய இருவரும் மசினகுடி அருகே உள்ள குரும்பர்பாடி பகுதிக்குச்  சென்று , அங்கு வசிக்கும் பழங்குடியினரைச் சந்தித்து, வன உரிமைச் சட்டத்தின் கீழ், வன உரிமைக் குழு உருவாக்குவது தொடர்பாக, பழங்குடியினப் பெண்களை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது, போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் ஆதிவாசி மக்களை ரகசியமாக சந்தித்தது மாவோயிஸ்ட்டுகளா?  பாேலீஸார் விசாரணை என்று செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சோபா மற்றும் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன்  கூறுகையில், ‛‛நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில்,  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் அவர்களது பிரச்னைகள், தேவைகள்குறித்து மாநில பழங்குடியினர் துறை அலுவலகத்துக்கு தெரிவிக்கும் நோக்கில், கணக்கெடுக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுவருகிறோம்.  மேலும், 2006-ம் ஆண்டு இந்திய அரசு அமல்படுத்திய வன உரிமைச் சட்டம், தமிழகத்தில் 2016-ம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின்படி,   வனத்தில் உள்ள சிறு வனப் பொருள்களை பழங்குடியினர் சேகரிப்பதற்கான அனுமதியை, கிராமசபை கூடி முடிவு எடுக்க வேண்டும். இதற்காகவும், வனப் பாதுகாப்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக குரும்பர்பாடியில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பாேது அங்கு வந்த முன்னாள் வார்டு உறுப்பினர் தாயம்மா என்பவர், எதற்காக இந்த மீட்டிங் நடக்கிறது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் முரளி, எனது மொபைல் போனை பிடுங்கி வைத்துக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

நான் வெளியூர்  நபர் அல்ல, கூடலுாரை அடுத்த எருமாடு என்ற இடம்தான் எனது சொந்த ஊர். நானும் பழங்குடியின பெண்தான். இங்கு வருவது 3-வது முறை என்று விளக்கியும், இனிவரும் நாள்களில் இப்பகுதிகளுக்கு வருவதற்கு முன்னால், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் வரவேண்டும் என்றார். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக மசினகுடியை அடுத்த குரும்பர் பாடி பகுதிக்கு வராத போலீஸார், திடீரென கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் மாவோயிஸ்ட் குறித்து பழங்குடியின மக்களிடம் விளக்கமளித்துள்ளனர். மாவாேயிஸ்ட் என்ற வார்த்தையை அறியாத பழங்குடியின மக்களிடம், மாவாேயிஸ்ட் என்ற பயத்தை ஏற்படுத்துவதே காவல்துறையினர்தான்.   அதேபோல, அன்றைய தினமே குரும்பர்பாடி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாடு செல்லும் பாதையை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  வனத்துறை, காவல்துறை மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர் தாயம்மா ஆகியோர் இணைந்து, பழங்குடியினர் முன்னேற்றத்தைத் தடுக்கவும்,  அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, வனப் பகுதிக்குள் உள்ள வளங்களை அரசுக்குத் தெரியாமல் கொள்ளையடிக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற சந்தேகம் எழுப்புகிறது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!