`உங்களை வைத்துக்கொண்டு தினம் தினம் அவதிப்படுகிறேன்'- ஜெ.அன்பழகனிடம் கடுகடுத்த சபாநாயகர் | Speaker dhanabal speak about DMK MLA J Anbazhagan

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (03/07/2018)

`உங்களை வைத்துக்கொண்டு தினம் தினம் அவதிப்படுகிறேன்'- ஜெ.அன்பழகனிடம் கடுகடுத்த சபாநாயகர்

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம் தினம் அவதிப்படுவதாக, பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர்

 

மானியக்கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், பேரவையில் தி.மு.க - அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடையே கருத்து மோதல்களும், விமர்சனங்களும், சிரிப்பலைகளும், வெளிநடப்புகளும், அரங்கேறிவருகின்றன. அந்த வகையில் இன்று, போக்குவரத்துத் துறை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எந்த ஆட்சியில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது என தி.மு.க - அ.தி.மு.க தரப்பினர் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தின் நடுவே, தன்னைப் பேச அனுமதிக்குமாறு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் தனபால், `ஒருநாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. பேரவைக்குத் தாமதமாக வரும் அன்பழகன், தினமும் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோருகிறார். அதுவும் சம்பந்தமே இல்லாத டாப்பிக் பற்றி பேசவேண்டும் என்கிறார். பேச அனுமதிக்கவில்லை என்றால் அவையை விட்டு வெளியில் சென்றுவிடுகிறார். ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம் தினம் நான் அவதிப்படுகிறேன்' என்று கடுப்பானார் சபாநாயகர்.

பேரவை

இதையடுத்து, ஜெ.அன்பழகனைப் பேசவிடும்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதற்கு சபாநாயகர், ஜெ.அன்பழகன் சம்பந்தமில்லாமல் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிடுவேன் எனக் கூறி அனுமதியளித்தார். இதையடுத்து, தமிழக அரசு குறித்து ஜெ.அன்பழகன் பேசத் தொடங்கியதும், அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, அவரை அமரச்சொன்னார் சபாநாயகர். இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவரின் குற்றச்சாட்டுக்கு தனது ட்விட்டர்மூலம் பதிலளித்துள்ளார் ஜெ.அன்பழகன். அதில், `சட்டசபையில் எனக்குப் பேச அனுமதியில்லை என்பதைத் தாமாகவே ஒப்புக்கொண்டதற்கு நன்றி. நான் சரியான நேரத்தில்தான் சபைக்கு வருகிறேன். அதற்கான விளக்கத்தை அளித்தும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டனர். எனக்குப் பேச வாய்ப்பு அளிக்காததற்கு பொய்யான குற்றச்சாட்டைக் கூறுகிறார் ஆளுங்கட்சி நாயகர்' எனப் பதிவிட்டுள்ளார்.