வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (03/07/2018)

`மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டது!' - முத்தரசன் குற்றச்சாட்டு

“மக்கள் அதிகாரம், ஒரு சிறிய அமைப்பு. அவர்களால் 10 ஆயிரம் பேரை திரட்டுவது என்பது சாத்தியமில்லை. அந்த அமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதுசெய்யப்பட்டு, அவர் வாக்குமூலம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, ஜோடிக்கப்பட்ட வழக்கு” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி துப்பாக்கி சூடு, தடியடி நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொண்டதாக சட்டமன்றத்தில் முதல்வர் கூறியிருக்கிறார். அப்படியென்றால், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா? துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளுநர் உத்தரவிட்டரா? என முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் உட்பட  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூக்கு உத்தரவிட முடியாது. இது, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை.  தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் அடியாட்களாக காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளது. 

சம்பவம் நடந்து முடிந்த பின்னர், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்வதும், வீடுகளுக்குச் சென்று பெண்களை அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக நடந்துவருவது, மீண்டும் பதற்றம் உருவாக்க அரசு முயன்றுவருகிறது. மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதுசெய்யப்பட்டு, அவர் வாக்குமூலம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, ஜோடிக்கப்பட்ட வழக்கு.

அரசு, தாங்கள் செய்த தவற்றை மூடி மறைக்க, பிறர் மீதும் பொதுமக்கள் மீதும் பழிசுமத்தி தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது ஏற்புடையதல்ல. ஸ்டெர்லைட் ஆலை மூடியதால், வேலை வாய்ப்பு இழந்தவர்களுக்கு மாற்று வேலை அளிக்கவேண்டியது அரசின் கடமை. இந்தப் பிரச்னைகுறித்து மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்றால், உயர் நீதிமன்ற கண்காணிப்போடு சி.பி.ஐ விசாரணை நடக்க வேண்டும். கைது நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். அப்பாவி மக்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும். மக்கள் அதிகாரம் ஒரு சிறிய அமைப்பு. அவர்களால் 10 ஆயிரம் பேரைத் திரட்டுவது என்பது சாத்தியமில்லை. அந்த அமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. சிறிய கட்சிகளைக் குறிவைத்துத் தாக்குவது, தடை செய்வது, கைதுசெய்வது எனப் பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களை அரசு செய்துவருகிறது.

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கருத்துகளை அறிந்து நடவடிக்கை எடுக்கக் கூறிவருகிறோம். ஆனால் வருவாய்த்துறை, காவல்துறை மூலமாக அரசு பலவந்தமாக கருங்கல் நடும் பணி நடத்துகிறது. இது, மத்திய அரசின் திட்டம். எங்களுக்கும் அதுக்கு சம்பந்தமில்லை எனக் கூறுவது மாநில முதல்வருக்கு அழகல்ல. இந்த 8 வழிச் சாலையை மறு பரிசீலனைசெய்ய வேண்டும்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க