வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (03/07/2018)

'கோவை குடிநீர் ஒப்பந்தம்குறித்து தவறான தகவல்!' - அமைச்சர்மீது பாயும் ஜி.ஆர்

கோவை குடிநீர் விநியோகம் ஒப்பந்தம் குறித்து, அமைச்சரும், தமிழக அரசும் தவறான தகவலைப் பரப்புவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜி.ஆர்


கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், சென்னையில் ஊடகவியலாளர் முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் நலன்களைப் காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அந்த அமைப்புக்கு, வரவேற்பும் ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் முடிவுகள் சாமானியர்களைப் பாதிக்கிறது. ஜி.எஸ்.டி அமலான பிறகு, சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து பேச பிரதமர் மறுக்கிறார். பல்கலைக்கழக மானியக்குழுவை மூடிவிட்டு, அரசின் துறையாக மாற்றும் அரசாணையால், மேலும் உயர்கல்வித்துறை தனியார் மயமாக வித்திடும். 

லோக்பால் சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் எந்தத் திட்டத்தை எதிர்த்தாலும் கைது என்ற நிலை உள்ளது. அரசைப் பற்றி விமர்சித்தாலே கைது என்பது ஜனநாயக விரோதப் போக்கு. கோவை மாநகராட்சி, குடிநீர் விநியோக உரிமை ஒப்பந்தம் தொடர்பாக அரசோ, மாநகராட்சி நிர்வாகமோ அறிவிக்காமல், தனியார் நிறுவனம்தான் முதலில் அறிவிப்பு வெளியிட்டது. அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 5 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்தம் என உள்ளது. ஆனால், தனியார் நிறுவன செய்தி குறிப்பில் 26 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது. எனவே, ஒப்பந்தத்தின் முழுத் தகவலையும் மாநகராட்சி  வெளிப்படைத் தன்மையாக வெளியிட வேண்டும். சூயஸ் நிறுவனம் தொடர்பாகத் தவறான தகவலை அமைச்சரும், அரசும் வழங்குவது தவறு. வெளிப்படைத் தன்மை இல்லாமல் போடப்படும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும். 

குடிநீர் வழங்குவதற்கு சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்கள் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுவருகிறு. அப்படியிருக்கும்போது, இதை, ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு வழங்கவேண்டிய அவசியமில்லை. சேலம் - சென்னைக்கு ஏற்கெனவே, 2 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், 3-வதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை. இதை எதிர்த்து, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களைக் கையில் எடுக்க உள்ளோம். காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், அதை மாநில அரசு உரிய சட்ட நிபுணர்களைக் கொண்டு மாநில உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் பற்றி தமிழிசை தவறாகப் பேசியது கண்டனத்துக்குரியது" என்றார்.