8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை தர தரவென இழுத்துச்சென்றது போலீஸ்!

விவசாயிகள் போராட்டம்

8 வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகளை துரத்திப் பிடித்துத் தர தரவென போலீஸார் கைது செய்தது அந்தப் பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்குச் சேலத்தில் கடந்த வாரம் நில அளவை செய்து முட்டுக்கல் நடப்பட்டது. இதையடுத்து இரண்டாம் கட்ட பணிக்காக இன்று முட்டுக்கல் நடப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு மீட்டர் அளவைக் கொண்டு நிலத்தை அளந்து வந்தார்கள். பாரப்பட்டி பூமாங்காடு பகுதியில் தங்கள் நிலத்தில் அளக்கக் கூடாது என விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள். இதையடுத்து காவல்துறையினர் அந்த விவசாயிகளை திருடர்களைபோல துரத்திப் பிடித்துத் தர தரவென இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

அந்தக் காட்சிகளை ஊடகவியலாளர்கள் வீடியோ பதிவு எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஊடகவியலாளர்களை ஒருமையில் திட்டியதோடு கேமராவைப் பிடிங்கி உடைத்து எறிந்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். பிறகு வாகனத்தில் ஏற்றப்பட்டவர்கள் மல்லூர் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார்கள்.

இதுபற்றி பாரப்பட்டி பூமாங்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள், ``எங்களுக்கு அரை ஏக்கர் நிலமும், வீடும் இருக்கிறது. இது இரண்டும் பறிபோகிறது. இதனால் ரொம்ப வேதனையில் இருக்கிறோம். எங்க கண் முன்னாடியே மீண்டும் மீண்டும் வந்து அளக்கும் போது அடிவயிறு எரியுது. இதை தட்டிக் கேட்பதற்காகப் போன என் கணவர் குணசேகரன், மருமகன் வரதராஜ், மகள்கள் கோகிலா, செல்வி என 4 பேரை பிடிச்சு இழுத்துட்டுப் போயிட்டாங்க. நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேன். ஸ்கூலுக்குப் போன குழந்தைகள் வீட்டுக்கு வந்தால் அம்மா, அப்பா எங்கன்னு கேட்டு அழுவார்கள். அவர்களுக்கு நான் என்னவென்று சொல்லுவது. அவுங்க என்ன தப்பு செஞ்சாங்க. அவுங்களை எதற்காக இப்படிக் கைது பண்ணி கூட்டிட்டுப் போக வேண்டும். எங்க நெலத்தை அளப்பதற்கு நாங்க எப்படி விட முடியும். எங்க உயிரு போனாலும் விட மாட்டோம்'' என்றார்.

பாரப்பட்டி பூமாங்காடு பகுதியைச் சேர்ந்த சுதாதேவி, ``எங்க வீட்டில் என் மாமனார், கொழுந்தனார், கொழுந்தனார் மனைவி, தங்கை, என் கணவர் என 5 பேரை திருடர்களை பிடிச்சுட்டுப் போவதைப்போல துரத்தி துரத்தி பிடிச்சுட்டுப் போயிருக்காங்க. போலீஸ்காரங்களுக்கு மனசாட்சியே இல்லை. இவுங்களுக்கும் பொண்டாட்டி பிள்ளைகள் இருக்குதானே. அரசியல்வாதி சொல்லறான் என்றால் தப்பு இல்லாமல் எப்படிப் பிடிச்சுட்டுப் போகலாம்'' என்று குமுறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!