`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும்!’ - தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமம் சார்பில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆலையால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும், இதனால் பலர் இறந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவந்தனர். தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, அனைத்துத் தரப்பினரும் ஆலையை மூட வலியுறுத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பொதுமக்கள்மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது; அதைத் தொடர்ந்து ஆலை மூடப்பட்டது.

போராட்டம்

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தேசிய பசுமைத் தீரப்பாயத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஊழியர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர். ஆலையின் உற்பத்தியால் பல்வேறு தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுவருகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை' என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!