`ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை அரசியல் தலைவர்கள் ஏன் ஏற்கக் கூடாது?’ - உயர் நீதிமன்றம் கேள்வி

'அரசியல் கட்சித் தலைவர்கள், குறைந்தபட்சம் 10 ஏழைக் குழந்தைகளின் கல்லூரிப் படிப்புச் செலவுகளை ஏன் ஏற்கக் கூடாது?' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருபாகரன்

மருத்துவக் கல்லூரிகளில் சேர மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வசிப்பதாக இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்று, தமிழகக் கல்லூரிகளில் சேர்வதைத் தடுக்கக்கோரி, புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்னயா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு இனி ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 1200-க்கும் மேற்பட்ட பிற மாநில மாணவர்கள், தற்போது தமிழக மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, நீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், குறைந்தபட்சம் 10 ஏழைக் குழந்தைகளின் கல்லூரிப் படிப்புச் செலவுகளை ஏன் ஏற்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோன்று இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் மற்ற மாநில மாணவர்கள் சேர்வதால், தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும் தெரிவித்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும்  பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படித்துவருகிறார்கள் என்பதை ஆய்வுசெய்து ஜூலை 8-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!