ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி வீட்டில் அத்துமீறிய போலீஸ்! - எழுத்தாளர்கள் கண்டனம்

திவ்யாபாரதி

கன்னியாகுமரியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒகி புயல்குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ள திவ்யாபாரதியின் வீட்டில் போலீஸ் அத்துமீறி தேடுதலில் ஈடுபட்டதாக, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

வழக்கறிஞரும் ஆவணப்பட இயக்குநருமான த.மு.எ.க.ச மதுரை மாவட்டக்குழு உறுப்பினருமான திவ்யாபாரதியின் வீட்டை இன்று அதிகாலையில் போலீஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளது,அராஜகச்செயல் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டித்துள்ளது. 

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: 

மதுரை மாவட்ட த.மு.எ.க.ச-வில் மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவர் திவ்யாபாரதி. ஏற்கெனவே, "கக்கூஸ்" என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார், வழக்கறிஞராகவும் பணியாற்றிவருகிறார். இவர், தற்போது ஒகி புயல் பாதிப்புகள்குறித்து "ஒருத்தரும் வரேல" என்கிற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் அதன் முன்னோட்டக்காட்சி (டீஸர்) வெளியாகி, பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று (02.07.18), சேலம் க்யூ பிராஞ்ச் போலீஸார் என்று சொல்லிக்கொண்ட சிலர், திவ்யாபாரதியின் தந்தையிடம் சென்று இந்தப் படம்பற்றிய தகவல்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

திவ்யாபாரதி

தனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துவிட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதலே பெண் காவலர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸார் திவ்யாபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவரது, "ஒருத்தரும் வரலே" படத்தின் வீடியோ எங்கிருக்கிறது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் இருந்த அவருடைய கணவர் கோபாலை, ’திவ்யா எங்கே’ எனக் கேட்டு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, திவ்யாபாரதியின் நடமாட்டத்தைக் கண்காணித்துவந்த போலீஸார், இன்று பிற்பகல், அவர் நீதிமன்றம் சென்றிருந்தபோது அங்கும் வந்து திவ்யாபாரதியின் வண்டிச்சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு, ’எங்களுடன் வா விசாரிக்கணும்’ என மிரட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்களுடனும் போலீஸார் வாக்குவாதம் செய்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின்படியாக இயங்கும் ஒருவரது கலைச் செயல்பாட்டு உரிமையில், இதுபோல அராஜகமான முறையில் போலீஸார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. உரிய காரணங்கள் சொல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வீட்டைச் சோதனையிடுவதும் விசாரணைக்கு ஒருவரை அழைக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய சட்ட வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் விசாரணைக்கு அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும்.

கருத்துச்சுதந்திரத்தைக் கைக்கொள்ளவிடாமல், அச்சுறுத்தி முடக்கும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீஸார்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கருத்துரிமை மீதும் கலைச்செயல்பாட்டின்மீதும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் காவல்துறையின் இந்த அராஜகச் செயலைக் கண்டிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று த.மு.எ.க.ச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!