வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (03/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (03/07/2018)

`நாங்கள் கார்ப்பரேட் அடிமைகள்!’ - சேலத்தில் கவனம் ஈர்த்த ஆர்ப்பாட்டம்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று அவர்களுக்கு ஆதரவாக மனித நேய மக்கள் கட்சியினர் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சையத் மூசா, மாவட்டச் செயலாளர் நிசார் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மாட்டு வண்டியில் அமரவைக்கப்பட்டிருந்த இருவர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் போல் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் கழுத்தில், `நாங்கள் கார்ப்பரேட் அடிமைகள்’ என்று எழுதப்பட்ட போர்டு தொங்கியது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர் சையத் மூசா, ``விவசாய நிலங்களையும் காடுகளையும் மலைகளையும் இயற்கையையும் அழித்துவிட்டு ரோட்டை போட்டால் போதுமா, மக்கள் எதைச் சாப்பிடுவார்கள். எப்படி சுவாசிப்பார்கள் என்ற சிந்தனை வேண்டாமா. இந்தியாவிலேயே தமிழகம்தான் கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். இதை எப்படியாவது மத்திய மோடி அரசாங்கம் கொள்ளை அடித்துவிட வேண்டும் என நினைக்கிறது. இதற்கு எடப்பாடியும் பன்னீரும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  

வளர்ச்சி என்ற முழக்கம் தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. அது பல இடங்களில் பைத்தியம் பிடித்து துப்பாக்கிகளையும் லத்திகளையும் தூக்கிக்கொண்டு வேடையாடுகிறது. மரங்களை வெட்டு, காடுகளை அழி, காற்றை மாசுபடுத்து, மண்ணை மலடாக்கு, நீர் ஆதாரத்தை இல்லாமல் ஆக்கு. இறுதியில் உன்னை ஆசுவாசப்படுத்த பாரத் மாதாக்கீ ஜே என்று கோஷமிடு. இதை செய்யவில்லை என்றால் நீ தேசத் துரோகி. இதுவே இன்று இந்தியாவின் தேசப்பற்று என ஒரு கூட்டம் கொக்கரிக்கிறது’’ என்று பேசினார்.