ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி சந்திப்பு!

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம மக்களை, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி நேரில் சந்தித்து கலந்துரையாடினார். 

ஸ்டெர்லைட்

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைச்  சுற்றி 18 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன. என்ன தேவைகள் உள்ளன என அறிந்துகொள்ள, கிராம மக்களுடன் ஒரு நேரடி கலந்துரையாடலை ஆட்சியர் சந்தீப் நந்துாரி இன்று நடத்தினார். ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்துார்  கிராமத்தில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் இந்தக்  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் தேவசகாயம், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்க்த கூட்டத்தில், புதியம்புத்துார், வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.குமரெட்டியாபுரத்திலிருந்து வந்திருந்த பெண்கள் மட்டும், தங்களது கிராமத்திலிருந்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மற்ற கிராமத்தினர், தங்களின் கிராமங்களுக்கான குடி தண்ணீர், சாலை வசதிகள், பாலம் போன்ற அடிப்படை வசதிகள்குறித்து புகார் கூறினர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலர் ஹென்றி, இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ”சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து, ரூ.5 ஆயிரம் கோடி இழப்பீடு பெற சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனு அளித்தார்.

கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ”ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகள் பற்றி ஆய்வுசெய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் அந்தக் கிராமங்களில் ஆய்வுசெய்து வருகின்றனர். இன்று, புதியம்புத்துார், வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம் மக்களிடம் கலந்துரையாடல் நடத்தினோம். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூறியிருக்கிறார்கள். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, கைது செய்யப்பட்டவர்களைப் பற்றியும் கேட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது உள்ள வழக்குகள் பற்றி எஸ்.பி-யுடன் கலந்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கூட்டத்தில் 50 பேருக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். பல இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஒன்றரை மணி நேரம் மட்டுமே இக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டம்குறித்து கிராமங்களில் முறையாகத் தகவல் அளிக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!