`வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதில் சிக்கல்' - தங்கச்சிமடத்தில் நிலவும் பதற்றம்!

 

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கடந்த திங்களன்று கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துப் பொருள்களை செயல் இழக்கச் செய்வதில் சிக்கல் நீடித்துவருகிறது.

வெடிமருந்துகள்

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் மீனவர் அந்தையா இவருக்குச் சொந்தமான பண்ணை வீடு அந்தோணியார்புரத்தில் உள்ளது. அந்தையா இறந்துவிட்ட நிலையில் அவரின் மகன் எடிசன் என்பவர் தற்போது இந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை இவரது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்வதற்காகக் குழி தோண்டியுள்ளனர். அப்போது குழிக்குள் துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து குழிதோண்டிய அவர்கள் அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் குழி தோண்டினர். அப்போது இயந்திர துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 10,828 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஏவுகணையில் பயன்படக்கூடிய வெடிபொருள்கள், நில கன்னிவெடிகள், ஒரே நேரத்தில் 15 டெட்டனேட்டர்களை வெடிக்கும் திறன் கொண்ட டைனமோ, வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் இரும்பு ஸ்லம்புகள், எச்சரிக்கை வெடிகள் என ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மறுநாள் மதுரையிலிருந்து வந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழுவினர் வெடிபொருள்கள் சிக்கிய பகுதிகளில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வேறு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்தனர். சிக்கிய வெடிபொருள்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை என்பது அப்போது தெரிய வந்தது. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் இவற்றால் ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது. மேலும், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏவுகணையில் பொருத்தப்படும் பொறிகளான பியூஸை மட்டும் தனியாகப் பிரித்து பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றனர்.

தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்தினை ஆய்வு செய்யும் பணி

இதைத் தொடர்ந்து ஆபத்தும் ஏற்படுத்தும் இந்த வெடிபொருள்களை நீதிபதி ஆய்வு செய்தார். இதையடுத்து வெடிபொருள் செயல் இழப்பு பிரிவினரின் அனுமதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் வழங்க போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தினர். திருத்தங்கலில் உள்ள வெடிமருந்து செயல் இழப்பு பிரிவினர் மற்றும் சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிகுண்டு கட்டுப்பாட்டு துறையினரிடம் ஆய்வு செய்ய போலீஸார் கோரியிருந்தனர். தங்களிடம் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைச் செயல் இழக்கச் செய்யும் வசதி இல்லை என்பதால் இந்த ஆய்வை மேற்கொள்ள முடியாது என மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து இன்று மாலை தங்கச்சிமடம் வந்திருந்த மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிகுண்டு கட்டுப்பாட்டு துணை இயக்குநர் பிரசாந்த் யாதவ், சேக் உசைன் ஆகியோர் கைபற்றப்பட்டிருந்த வெடிகுண்டு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதன் பின்னர் வெடிபொருள்களில் இருந்த வெடிமருந்து பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்காகச் சேகரித்தனர். அப்போது குடியிருப்புப் பகுதியில் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருப்பதால் அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஏவுகணையில் பொறுத்தக்கூடிய பியூஸ் எனப்படும் வெடிமருந்து பொறி குறித்து தாங்கள் சான்று வழங்க இயலாது எனக் கூறிய அவர்கள், இதனை தவிர மற்ற வெடி பொருள்களைச் செயல் இழக்கச் செய்ய உரிய அனுமதியை வழங்குவதாகக் கூறிச் சென்றனர்.

 இதனால் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏவுகணை பியூஸ்களைச் செயல் இழக்கச் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே வெடிமருந்து குவியல் கண்டுபிடிக்கப்பட்டு 8 நாள்கள் ஆன நிலையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இவற்றைச் செயல் இழக்கச் செய்ய மேலும் சில நாள்கள் ஆகும் என்பதால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!