சிலை கடத்தல் வழக்கில் மும்பையைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமீன்!

விழுப்புரம் அருகே வீரசோழபுரம் அர்த்தநாதீஷ்வரர் கோயில் சிலை கடத்தல் வழக்கில் மும்பையைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமீன் வழங்கி  உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிலைகடத்தல்

மும்பை அந்தேரி மேற்கு பகுதியைச் சேர்ந்த வல்லப பிரகாஷ் மற்றும் அவரின் மகன் ஆதித்ய குமார் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில்  முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அர்த்தநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிலைகள் திருடி கடத்தப்பட்டது. சிலைகளைத் திருடி கடத்தியது தொடர்பாக எங்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சிலைகளில் சில அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் இயங்கிவரும் அருங்காட்சியத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபுர் என்பவருக்கு இந்தச் சிலை கடத்தலில், நாங்கள் உதவி செய்ததாகப் போலீஸார் கூறியுள்ளனர். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம். எனக்கு 87 வயது ஆவதால் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கில்  முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வல்லப பிரகாஷுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவருடைய மகன் பெயர் வழக்கில் இல்லை என்று சிலை தடுப்பு போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!