`சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய முடியாது' - நிதின் கட்காரி திட்டவட்டம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்துவதை ரத்து செய்ய முடியாது என  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை, தனியாரால் பராமரிக்கப்பட்டு வருவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான சுங்கச்சாவடிகளில், கோடிக்கணக்கில் சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கவரிக்கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவதால், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த  சுங்க வரிக்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஜ்தாக்ரேயின் நவ நிர்மாண் சேனா கட்சி, மற்றும் பல்வேறு தொண்டு நல அமைப்புகள் சுங்க வரிக் கட்டணத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

சுங்கவரி

இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரிக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த முடியாது என்றும், நல்ல சேவைகள் பெற நினைத்தால் பணத்தை செலுத்திதான் ஆகவேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா முழுவதிலும் நடந்த 4 லட்சத்து 60ஆயிரம் விபத்துகளில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். மேலும், விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தனது அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகவும் நிதின்கட்காரி தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!