வெளியிடப்பட்ட நேரம்: 03:31 (04/07/2018)

கடைசி தொடர்பு:03:31 (04/07/2018)

`பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' - திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக கொதிக்கும் அதிமுக பிரமுகர்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் அ.தி.மு.கவை சேர்ந்த ராஜா சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் "வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து அவதூறாக பேசுவருதாகவும் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி தினகரன் கொள்ளையடித்து வைத்துக் கொண்டு தற்போது 18 எம்எல்ஏக்களுக்கு செலவு செய்து வருகிறார் என்றும் மேடைகளில் பேசுகிறார். இவரின் இந்தப் பேச்சு ஜெயலலிதாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளது. எனவே அமைச்சர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி  ``திண்டுக்கல் சீனிவாசன் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு தவறாகப் பேசி உள்ளார். எனவே அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று தான் பேசியது தவறு என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் போதும் இந்த வழக்கை நாங்கள் திரும்ப பெற்றுக் கொள்கிறோம்" என்றார் . இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகக் கால அவகாசம் கோரியதால் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.