காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! - அடையாற்றில் பரபரப்பு | Rowdy Anandan shot dead by police!

வெளியிடப்பட்ட நேரம்: 22:51 (03/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (03/07/2018)

காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! - அடையாற்றில் பரபரப்பு

சென்னையில் ரோந்து பணிக்குச் சென்ற காவலரைத் தாக்கிய ஆனந்தன் என்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ரவுடி

ராயப்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் ராஜவேலு என்பவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தர்ஹா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே தகராறு நடப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு சென்றுள்ளார் அவர். அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களைக் கலைந்து போகச் சொன்ன காவலர் ராஜவேலுவை மது மயக்கத்தில் இருந்த ரவுடி அரவிந்தன் என்பவர் கத்தியால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடமிருந்து தப்பிய ராஜவேலு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். காவலரைத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 6 பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவலரைத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், அடையாறு மத்திய கைலாஷ் அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரவுடி ஆனந்தன் உடல் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட ஆனந்தன்மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.