வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (04/07/2018)

கடைசி தொடர்பு:02:12 (04/07/2018)

'6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் என்கவுன்டர் ..!'' ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை

சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என்கவுன்டர் நடந்துள்ளது. வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு இளைஞர்கள் 5 பேரை வேளச்சேரியில் சென்னை போலீசார் 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். அப்போது, இந்த என்கவுன்டர், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதற்கிடையே, தற்போது பொதுமக்களுக்கு இடையூறு செய்த ரவுடிகளை கண்டித்த போலீஸ்காரரை 16 இடங்களில் வெட்டி வீழ்த்திய ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், சென்னை தரமணியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட ஆனந்தன்

சென்னையின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் உள்ளது பி.எம்.தர்கா குடிசைப்பகுதி. இங்கு ஒரு கும்பல் குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்வதாக கடந்த 2-ம் தேதி இரவு, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீஸார், அத்தகவலை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்கள். அப்போது, இரவுப் பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜவேலு சம்பவ இடத்துக்கு சென்று அந்த ரவுடிகளை எச்சரித்தார். அப்போது, தனியாக வந்த போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த ரவுடிகள் அடித்து உதைத்தனர். அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் ராஜவேலு தலையில் 16 வெட்டு விழுந்தது. மேலும், கன்னத்திலும் காதிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்த போலீஸ்காரர் ராஜவேலு இறந்துவிட்டார் என்று  அந்த ரவுடிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். பொதுமக்கள் உதவியுடன் ராஜவேலுவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

படுகாயமடைந்த காவலர் ராஜவேலு

இந்தநிலையில், ரவுடி ஆனந்தன் மற்றும் அவனது கூட்டாளிகள்தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து, இரவு முழுவதும் சென்னை மாநகரில் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், பகலிலும் ரவுடி ஆனந்தன்  மற்றும் அவன் கோஷ்டியை சேர்ந்தவர்களைத் தேடி வந்தனர். அப்போது, ஆனந்தன் டீமில் சிலர் சிக்கினர். ஆனந்தன் எங்கெங்கு செல்வான் என்பதை அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அந்த இடங்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று இரவு, போலீஸ் வளையத்தில் சிக்கிய ஆனந்தனை, இரவு 8 மணி அளவில் தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே மடக்கினர். அப்போது, அவனை பிடிக்கச் முயன்ற போலீஸ் பிடியில் இருந்து தப்பிய ஆனந்தனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் படுகாயமடைந்த ஆனந்தனை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன், இணைக் கமிஷனர் அன்பு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினர். என்கவுன்டர்  நடந்த தரமணி பகுதியிலும் ராயப்பேட்டையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரவுடி ஆனந்தனுக்கு 22 வயது ஆகிறது. கொலை, கொள்ளை என்று மொத்தம் 12 வழங்குகள் நிலுவையில் உள்ளது.

2012 ஆம் ஆண்டு, பிளாஸ்பேக்..!

சென்னை பெருங்குடியில் 2012-ஆம்  ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி, பாங்க் ஆப் பரோடா கிளையில் பட்டப் பகலில் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 20-ஆம் தேதி கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த இரண்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்தவர்கள் என்பதும் அவர்கள், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலணியில் குடியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஓரு வீட்டில் இருந்த அவர்களை போலீஸார், பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு சுற்றி வளைத்தனர். போலீஸாரை அந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு போலீஸார் அவர்களை நோக்கி சுட்டனர். இந்த என்கவுண்டரில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள், பீகாரைச் சேர்ந்த சந்திரிகா ராய், ஹரிஷ் குமார், வினய் பிரசாத், வினோத் குமார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த அபய் குமார். இந்த என்கவுன்டர்  அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர், 6 ஆண்டுகள் கழித்து சென்னையில் நேற்று இரவு நடந்த என்கவுன்டரில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க