`தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்ட ஒன்று' - திருமாவளவன் குற்றச்சாட்டு!

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட ஒன்று.  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி ஆதரவாகச் செயல்படுகிறார். மோடியின் உத்தரவை நிறைவேற்றிவருகிறார் எடப்பாடி. அதனால்தான், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்கூட வரைமுறை பின்பற்றப்படவில்லை" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திருமாவளவன்

தூத்துக்குடியில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் நினைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க அஞ்சலிப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ``தூத்துக்குடியில் 99 நாள்களாக அறவழியில்  போராடிய மக்களை ஒருமுறைகூட ஆட்சியாளர்கள் யாரும் சந்திக்கவில்லை என்பதால்தான், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகையிடப் பேரணியாகச் சென்றனர். மக்கள்மீது காவல்துறை நடத்திய தாக்குதலால்தான், கலவரம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர். சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதற்கு, அப்பிரச்னைகளை எதிர்கொள்ள திறமை அற்ற அதிகாரிகள்தான் காரணம். முந்தைய ஆட்சியர் வெங்கடேஷ், இச்சம்பவம் நடந்த நாளுக்கு முன்பாக நடந்த சமாதானக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் என்பது அறிந்தே, அவர் கோவில்பட்டிக்குச் சென்று விட்டதாகத் தோன்றுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு, முதலமைச்சர் மற்றும் ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் நடத்திட முடியாது. ஆட்சியர் இல்லாவிட்டால், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள  டி.ஆர்.ஓ., அல்லது ஆர்.டி.ஓ., ஆகியோர்தான் உத்தரவு அளிக்க வேண்டும். ஆனால், துணை வட்டாட்சியர்கள் அனுமதி அளித்தனர் என்பதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது, முழுக்க முழுக்க தமிழக அரசின் திட்டமிடப்பட்ட படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். மோடி சொல்கிறார்; அதை முதல்வர் அதிகாரிகள்மூலம் அமல்படுத்தி, நியாயப்படுத்திப் பேசி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை  மட்டுமல்ல, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருகிறார் மோடி. துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவு மட்டுமல்ல, அறிவிப்பு, கண்ணீர்ப் புகை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல், முழங்காலுக்குக் கீழ் லத்தி சார்ஜ் செய்தல், வானத்தை நோக்கிச் சுடுதல் என துப்பாக்கிச் சூடு, வரைமுறை இல்லாமலே நடந்துள்ளது.  

இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் போரில், காஷ்மீர் போன்ற எல்லைப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளாம். ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலுக்கு நெருக்கமானவர் மோடி. அதனால்தான், தமிழக அரசும் தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே செயல்பட்டுவருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில், மக்கள் தன்னெழுச்சியாகப் போராடியதைப் போல, இந்த ஸ்டெர்லைட் விவகாரத்திலும் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினர். இவ்வாறு, தொடர்ந்து போராட்டங்கள் தொடரக்கூடாது என்பதாலும், இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடத்திடக் கூடாது என்பதாலும்தான், இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தில் துணைநின்ற மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்புகள்தான் மூளைச் சலவைசெய்து மக்களை போராட்டத்துக்குத் தூண்டினர் என்ற குற்றசாட்டுகள் எதுவும்  உண்மையல்ல. இனியும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசு முற்பட்டால், இதைவிட இரண்டு மடங்கு பெரிய போராட்டம் வெடிக்கும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!