நீட் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதி கோரி மாணவன் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழக ஒதுக்கீட்டின் கீழ் நீட் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில், அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், எரும்பிலியைச் சேர்ந்த அதுல் சந்த், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், ``நான் கன்னியாகுமரியைச் சேர்ந்தவன் , 7-ம் வகுப்பு வரை குலசேகரம் பள்ளியில் படித்தேன். 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் படித்தேன். நீட் தேர்வில் 339 மதிப்பெண் கிடைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தேன். 

இதுவரை கவுன்சலிங்கில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தமிழர்கள்தான். தமிழகத்தில்தான் அனைத்து சான்றுகளும் உள்ளன. நான் படிப்பதற்காக மட்டுமே கேரளாவுக்குச் சென்றேன். எனவே, நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழக ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை  விசாரணைசெய்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்று (ஜூலை 4) ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!