வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (04/07/2018)

கடைசி தொடர்பு:10:21 (04/07/2018)

`ஆதரவற்ற நிலையில் இருந்த மாற்றுத்திறனாளி பெண்' - தற்காலிக வீடு அமைத்துக் கொடுத்த கலெக்டர்

கரூர் மாவட்டத்தில், ஆதரவற்ற நிலையில் தனது 5 வயது மகளோடு, ஒருவேளை உணவு மட்டும் உண்டு வறுமையில் தவித்துவந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு தற்காலிக வீடு அமைத்துக் கொடுத்ததோடு, உணவு, உடை, ஆதார் அட்டை வழங்கி உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார், கலெக்டர் அன்பழகன்.

கலெக்டர்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை வட்டத்தில் இருக்கிறது, பால்வார்பட்டி. இந்தக் கிராமத்தில், கணவனை இழந்து, உதவ யாரும் இல்லாமல் தனது ஐந்து வயது குழந்தையோடு, ஒருவேளை உணவை மட்டும் உண்டு வாழ்ந்துவந்திருக்கிறார், மாற்றுத்திறனாளி பெண்ணான அழகம்மாள். அதுவும், எந்த வேலையும் செய்ய முடியாத சூழலால், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை ஒருவேளை மட்டும் தாயும், மகளும் உண்டு வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இந்தத் தகவல், அந்தப் பகுதிக்கு வேறு அரசுப் பணியாகச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவர், அழகம்மாளை சந்தித்தபோது, உண்ண உணவு மட்டுமல்ல, இருக்க வீடுகூட இல்லாமல் அவர் தவிப்பது  தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து அழகம்மாளிடம், 'உங்கள் குழந்தையைத் தத்துக் கொடுக்க விருப்பம் இருந்தால் கொடுங்கள்' என்று வருவாய்த்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் கலெக்டர் கேட்டிருக்கிறார். அழகம்மாளோ, 'எனக்கு ஒருவேளை உணவு இல்லைன்னா கூட பிச்சை எடுத்தாவது என் மகளை வளர்த்தெடுப்பேன்' என்று தனது மகள் மீதான பாசத்தைத் தெரிவித்திருக்கிறார். இவரின் பாசத்தை அறிந்த கலெக்டர் அன்பழகன், அழகம்மாளுக்கு உதவ முன்வந்தார். அதன்படி, அழகம்மாளின் நிலையை உணர்ந்து உரிய வசதிகளுடன்கூடிய தற்காலிக வீடு ஒன்றை வழங்கியுள்ளார். அதோடு, வருவாய்த்துறையினர்மூலம் அழகம்மாளுக்கு உடனடியாக ஆதார் கார்டும் வழங்கப்பட்டது.

கலெக்டர்

மேலும், அவருக்கு குடும்ப அட்டை வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்மூலம் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட இருப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். அதேபோல, அழகம்மாளின் மகள் மகாலெட்சுமிக்கு நல்ல கல்வி கிடைக்கவும், அழகம்மாளுக்கு மருத்துவ உதவியும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவுபோட்டிருக்கிறார். இது சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம். அதில், "அந்த அம்மா குழந்தையோடு ஒருவேளை மட்டுமே உண்டு, இருக்க இடம்கூட இல்லாமல் வறுமையில் வாடினார். அதனால்,மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அவரது தாய்ப்பாசம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது" என்றார்.