வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (04/07/2018)

கடைசி தொடர்பு:08:32 (04/07/2018)

’குல் மகாய்’ -வெளியானது மலாலா  பயோ பிக் ஃபர்ஸ்ட் லுக்!

பாகிஸ்தானில், பெண் குழந்தைகளின் கல்விக்காகக் குரல்கொடுத்த மலாலாவின் வாழ்க்கையை, பாலிவுட்டில் படமாக எடுத்துவருகின்றனர். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

மலாலா

பாகிஸ்தானில், தீவிரவாதிகளின் செயலால் பெண் கல்வி பாதிக்கப்படுவது தொடர்பாக ஊடகத்தில் தொடர்ந்து எழுதிவந்தார், பாகிஸ்தானின் 12 வயது சிறுமி மலாலா. இதனால் ஆத்திரமடைந்த தலிபான் தீவிரவாத அமைப்பு, அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேற்கத்திய கலாசாரத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், அவரை சுட்டதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது. 

பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியதால், இவருக்குக் கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இளம் வயதில் நோபல் பரிசுபெற்றவர் இவர்தான். அதே போன்று, அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியரும் மலாலா தான். ஐ.நா-வின் அமைதிக்கான இளம் தூதரான பெருமையையும் பெற்றார்.  துப்பாக்குச் சூடு தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசித்து வந்தார் மலாலா. 

இந்நிலையில், மலாலாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பாலிவுட்டில் முயற்சி நடந்தது. தற்போது, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 'குல் மகாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அம்ஜத் கான் இயக்குகிறார். இதில், ரீம் ஷைக், திவ்யா தத்தா, முகேஷ் ரிஷி, அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் கையில் இருக்கும் புத்தகத்தில், குண்டு வெடித்துச் சிதறுவது போல வெளிவந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், சினிமா ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பாலிவுட் திரையுலகில் தற்போது பயோ பிக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களில் வாழ்க்கை படமாக வந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.