வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (04/07/2018)

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடும் மத்திய அரசு

வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டுவரும் வதந்திகளால், தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்நிறுவனத்தை எச்சரித்துள்ளது மத்திய அரசு.

வாட்ஸ் அப்

இந்தியா முழுவதும், கடந்த சில மாதங்களாகவே குழந்தை கடத்தல் என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். யாரேனும் சாதாரணமாக ஒரு குழந்தை அருகில் சென்றாலே, அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து, ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் தாக்கும் சம்பவம் நாடு முழுவதும் தொடர்கதையாகிவருகிறது. இதுபோன்ற சம்பவங்களினால்,  இந்தியா முழுவதும் இதுவரை 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுவரும் வதந்திகளின் மூலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன என மத்திய அரசு முழுமையாக நம்புகிறது. இதனால், அதில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் மற்றும்  வதந்திகளைத் தடுக்கவும், நீக்கவும் வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

'தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர, அவரைத் தாக்கும் உரிமை யாருக்கும் கிடையாது' எனத் தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. இதுபோன்ற சம்பவங்களில், சட்டம் ஒழுங்கைக் கடுமையாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.