வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (04/07/2018)

கடைசி தொடர்பு:11:57 (04/07/2018)

'நீங்க வில்லங்கமா கேட்கிறீங்க..!' -என்கவுன்ட்டர்தான் தீர்வா என்ற கேள்விக்கு கலகலத்த ஜெயக்குமார்'

குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டர்தான் தீர்வாக இருக்குமா என்ற கேள்விக்கு, ''நீங்க வில்லங்கமாக கேட்கிறீங்க'' என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ''குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று பதில் அளித்தார்.

ஜெயக்குமார்

சென்னையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், `தமிழ்நாட்டில் தேவையில்லாத பிரமையை ஏற்படுத்த நினைக்கின்றனர். அமைதிப் பூங்கா, அமைதி தழுவும் மாநிலம் எது என்று பொதுமக்களிடம் கேட்டால், தமிழகத்தைத்தான் சொல்வார்கள். இப்படி இருக்கும்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகச் சொல்லக் கூடாது. காஷ்மீர் போன்ற மாநிலமாக தமிழ்நாடு இல்லை. இங்கு, சுதந்திரமாக நடமாட முடியும். இரவிலும் தனியாக நடமாடக்கூடிய சூழலும் உள்ளது.

தமிழகத்தில் நல்ல சூழல் நிலவுகின்ற நேரத்தில், சட்டம் சரியில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. மனித சமுதாயம் தோன்றிய காலம் முதலே குற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது அரசாங்கத்தின் கடமை. குற்றங்கள் நடைபெறும்போது அவற்றை மேற்கொண்டு நடக்கவிடாமல் தடுப்பதும் அரசாங்கத்தின் கடமை. இந்த இரண்டு கடமைகளையும் அ.தி.மு.க அரசு சரியாகச் செய்துவருகிறது. ஆகவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, அமைதிப் பூங்காவாக தமிழகம் உள்ளது' என்றார்.

குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டர்தான் தீர்வாகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், `' வில்லங்கமாக கேள்வி கேட்கிறீங்க; அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்கும். இதில், நீதிமன்றங்கள் முழுமையாகச் செயல்படுகிறது. அதனால், யாரையும் என்கவுன்ட்டர் செய்யவேண்டிய அவசியமில்லை. ஒரு தற்காப்புக்காகவும் அதேநேரத்தில் சமூகத்துக்காகவும்தான் என்கவுன்ட்டர் நடத்தப்படுகிறது' என்று கூறினார்.