வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (04/07/2018)

கடைசி தொடர்பு:16:17 (04/07/2018)

யார் இந்த ரவுடி ஆனந்தன்?- என்கவுன்ட்டரின் பரபர பின்னணி

 ரவுடி ஆனந்தன்


போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன், சிறுவயது முதலே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர்மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

சென்னை ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், ஆனந்தனும் அவரின் கூட்டாளிகளும் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற பெண்களைக் கிண்டல்செய்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில், காவலர் ராஜவேலு தனியொருவனாக அங்கு சென்றார். அப்போது, ஆனந்தனின் கூட்டாளிகள், ராஜவேலுவை சரமாரியாகத் தாக்கினர். அவரின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டு விழுந்தது. இதுதவிர, இடது காது மற்று கன்னத்திலும் வெட்டுக் காயங்கள் உள்ளன. 18 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிவரும் ராஜவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

காவலர் ராஜவேலுவைத் தாக்கிய ரவுடிக் கும்பலை போலீஸார் விடிய விடியத் தேடினர். அதில் அரவிந்தன், ஜிந்தா உள்பட 6 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.

இந்த ரவுடிக் கும்பலுக்குத் தலைவனான ஆனந்தன் மற்றும் சிலர் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். இதற்கிடையில் ராஜவேலுவின் வாக்கிடாக்கியும் ரவுடிக் கும்பலிடம் இருந்தது. இதனால், ரவுடிக் கும்பலின் லீடரான ஆனந்தனைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். கூடுதல் கமிஷனர் சாரங்கன் மேற்பார்வையில், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கொண்ட டீம், ரவுடி ஆனந்தன் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அப்போது, தரமணி அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆனந்தன் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை, ஆனந்தனைக் கைதுசெய்ய முயற்சி செய்தது. அப்போது, துணிச்சலுடன் ஆனந்தனை நெருங்கிய சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை அவர் அரிவாளால் வெட்டினார். இதில் இளையராஜா படுகாயமடைந்தார். 

அப்போது, ஆனந்தனுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நிலைமை விபரீதமானதும், உதவி கமிஷனர் சுதர்சன் உஷாரானார். தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர்மீது குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டுவிழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அப்போது அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆனந்தன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

என்கவுன்ட்டர் குறித்த தகவல் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். படுகாயமடைந்த இளையராஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடமும், உதவி கமிஷனர் சுதர்சனிடமும் என்கவுன்ட்டர் குறித்து உயரதிகாரிகள் விசாரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

 ரவுடி அரவிந்தன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இடம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  ``காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் அரிவாளால் வெட்டியதும், சக காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகுதான் நீண்ட காலத்துக்குப் பிறகு என்கவுன்ட்டரில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்" என்றனர். 

ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்தன். ராயப்பேட்டை காவல் நிலையத்தில், ரவுடிகள் பட்டியலில் ஆனந்தனின் பெயர் உள்ளது. இவர்மீது ராயப்பேட்டையில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்மீது கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் சகோதரர் அருண் மீதும் வழக்குகள் உள்ளன. ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும் 5 வயதில்  ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவரின் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்கு, அவர்கள் வந்தனர். அவரின் உறவினர்கள், பெரிய ரவுடிகளையெல்லாம் விட்டுவிட்டு 22 வயதாகும் ஆனந்தனை போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டனர். போலீஸைத் தாக்கியது தவறுதான். அதற்குத் தண்டனை என்கவுன்ட்டரா என்று ஆவேசமாகக் கூறினர். 

அதே நேரத்தில், போலீஸாரைப் பொறுத்தவரை, ஆனந்தன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. சமீபகாலமாக போலீஸார்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றன. காவலர் ராஜவேலுவை கண்மூடித்தனமாக ரவுடிக் கும்பல் தாக்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ராஜவேலு. அவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர். ராஜவேலு தாக்கப்பட்ட சம்பவம், சக போலீஸாருக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் போலீஸார் மத்தியில்  இந்தத் தாக்குதல் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. தற்போது, ஆனந்தன் என்கவுன்ட்டர் சம்பவம் போலீஸ் வட்டாரத்திலும் ரவுடிகள் வட்டாரத்திலும் ஹை டாப்பிக்காக இருந்துவருகிறது. 

போலீஸ் இணை கமிஷனர் அன்பு கூறுகையில், ``இந்த என்கவுன்ட்டர், திட்டமிட்டு நடத்தபடவில்லை. எதிர்பாராமல் நடந்தது. எங்களின் தற்காப்புக்காகத்தான் துப்பாக்கியால் சுட்டோம். குண்டு பாய்ந்து ஆனந்தன் பலியாகிவிட்டார். துப்பாக்கி சூடு குறித்து விரிவான அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும்" என்றார். 

கூடுதல் கமிஷனர் சாரங்கன் கூறுகையில்,`` ரவுடியால் தாக்கப்பட்ட ராஜவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை ஆனந்தன் தாக்கியபோதும்கூட அவரைப் பிடிக்கத்தான் போலீஸார் முயன்றனர். சரண் அடையும்படி அவருக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால், சரண் அடையாமல் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தார். வேறுவழியில்லாமல், தற்காப்புக்காகத்தான் எஸ்.ஐ. இளையராஜா, துப்பாக்கியால் ஆனந்தனைச் சுட்டார். தற்போது, இளையராஜாவும் சிகிச்சைபெற்றுவருகிறார்" என்றார்.

"ஆனந்தன், பள்ளியில் படிக்கும்போதே குற்றச் செயல்களில் ஈடுபட்டார். இதனால், பள்ளி படிப்பை பாதியில் அவர் நிறுத்திவிட்டு முழு நேரமாக குற்றச் செயல்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டுதான் ஆனந்தனின் பெயரை ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுவரை அவர் மீது 5 கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி, அடிதடி என 13 வழக்குகள் உள்ளன. ரவுடி சாம்ராஜ்ஜியத்தின் லீடராக திட்டமிட்ட அவர், அதற்காக எப்போதும் ஒரு கூட்டத்துடன் வலம் வந்தார். ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ஆனந்தனின் பெயரைக் கேட்டாலே தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்தளவுக்கு அவரின் ரவுடி செல்வாக்கு இருந்தது" என்கின்றனர் விவரம்  தெரிந்தவர்கள்.