எட்டு வழிச் சாலைக்கு எதிரான கருத்து; அதிகாலையில் கைதுசெய்யப்பட்ட வசீகரன்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து  போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

வசீகரன்

தமிழகத்தில், சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 5.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சியில் மாநிலத் தலைவர் வசீகரன்,  மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார். அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, போலீஸ் அவரைக் கைதுசெய்ததாகத் தெரிவிக்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் லெனின். 

இது தொடர்பாக லெனினிடம் பேசியபோது, “இன்று காலை, போலீஸார் அவரது மதுரவாயலில் உள்ள வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர். முதலில், மதுரவாயல் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்செல்வதாகத் தெரிவித்தனர். பின்னர், சேலம் காரிப்பட்டியில் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் பேசியதற்காக, கிராம அதிகாரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அதனால், விசாரணைக்கு அங்கு அழைத்துச்செல்கிறோம் என்று தெரிவித்தனர். தற்போது, அவரை சேலம் அழைத்துச்செல்கின்றனர். 

அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 6 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஒரு திட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்தாலே கைது என்பது கடும் கண்டனத்துக்குரியது. ஆம் ஆத்மி கட்சியின் தலைமையும் தமிழக அரசின் செயலுக்குக் கண்டனம் மற்றும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்னாள்கூட இப்படி ஒரு நிலை இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. அவரது கைதை ஆம் ஆத்மி வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!